Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மீனம்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
சகோதரர்களின் உதவி, - ஆடம்பர நாட்டம்


வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 4ல் கேது, 7ல் சனி, 10ல் ராகு என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசியில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை பிரவேசம் செய்கிறார்.
உயர்வு, தாழ்வு என்ற பெருத்த மாற்றமின்றி இந்த ஆண்டு சீராக அமையும். நல்ல எண்ணங்களை செயல்படுத்த தகுதியான நபர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் இருக்கும் வசதிகளையே முறையாக பயன்படுத்துவது போதுமானது. தாயின் உடல்நலத்திற்காக அதிக பணம் செலவாகும். பிள்ளைகள் நல்லவிதமாக நடந்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் உயரும். உடல்நலம் சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான நோய் உண்டாவதற்கான கிரகச்சூழல் உள்ளது. பணவரவு எதிர்பார்த்த அளவு இராது. கடன் வாங்கவும்,
ஆடம்பரத்தில் நாட்டம் செலுத்தவும் இடம் உண்டு. தம்பதியரிடம் இருந்த கருத்துவேற்றுமை நீங்கி குடும்பத்தில் சுமூக சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் ஆலோசனை வளமான வாழ்விற்கு வழிகாட்டும். தொழில் சார்ந்த வகையில் சில குழப்பங்களை சந்திப்பீர்கள். சகோதரர்களின் உதவியால் சில முன்னேற்ற பலன்கள் உண்டு. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் குறைந்த அளவே பயன் உண்டு. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புதிய சிந்தனைகள் உருவாகும்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் மந்தமான சூழ்நிலை இருக்கும். சிலர் தொழிலை மாற்ற வேண்டிய நிலை உண்டாகும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், இரும்பு, டெக்ஸ்டைல், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், விவசாய கருவிகள், கட்டுமான பொருட்கள், வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்கள், ஆட்டோமொபைல், மருத்துவமனை, விவசாய இடுபொருட்கள், அச்சகம் சார்ந்த தொழில் செய்பவர்கள் புதிய சீர்திருத்தங்களை செயல்படுத்தி கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு அதிக லாபத்துக்கு இடமில்லை. பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். நிர்வாகச் செலவு சற்று அதிகரிக்கும்.
வியாபாரிகள்: நகை, காகிதம், ஸ்டேஷனரி, தானியம், எண்ணெய், அழகு சாதன பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், ரப்பர் பொருட் கள், ஜவுளி, தோல், அலங்கார பொருட்கள், கட்டுமான பொருட்கள், கடல்சார் பொருட்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்பவர்கள் சுமாரான வியாபாரமும் அதற்கேற்ற லாபமும் பெறுவர். மற்றவர்கள் போட்டி குறைவு காரணமாக தற்போதைய விற்பனையைத் தக்கவைத்துக் கொள்ளலாம். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகமாகும். அளவான கொள்முதலில் சீராக வியாபாரத்தை வைத்துக்கொள்வது நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் ஏற்படும் குளறுபடிகளை மிகுந்த கவனத்துடன் தவிர்த்திட முயலவேண்டும். இல்லாவிட்டால் வேண்டாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சலுகைகளைஅவ்வளவு
எளிதில் பெற இயலாது. வேலைப்பளு முன்னைவிட அதிகரிக்கும். சிலர் வேண்டாத வாக்குவாதத்திலும் ஈடுபடுவர். குடும்ப செலவுகளுக்காக திண்டாட நேரிடும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். பள்ளி, கல்லூரி, மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் நிர்வாகத்தின் கண்டிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். சுயதொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் அவசரம் காட்டுதல் கூடாது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் வேலைப்பளு காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தற்போதைய சலுகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்கள் சிக்கனமாக செயல்பட்டு செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பர். தாய்வழி உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். மனதில் குழப்பமும் கவலையும் ஏற்பட்டாலும் கணவரின் ஆதரவு மனதிற்கு அமைதியைத் தரும். கர்ப்பப்பை தொடர்பான மருத்துவ சிகிச்சை சிலருக்கு தேவைப்படும் கிரகசூழ்நிலை உள்ளது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவர். தோழியரின் உதவியைகுருவின்அதிசாரகாலத்தில்பெறுவீர்கள்.
மாணவர்கள்: ஆசிரியர் பயிற்சி, வங்கியியல், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஜர்னலிசம், ஆடிட்டிங், நிதிநிர்வாகம், விவசாயம், சட்டம், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் அக்கறையும் ஆர்வமும் கொண்டால் மட்டுமே இலக்கை எட்டமுடியும். மற்ற துறை மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். ஆசிரியரின் உதவி தக்க தருணத்தில் கைகொடுக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் இருந்த ஆர்வம் சற்று குறையும். முக்கிய ஆதரவாளர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிரிகள் தொந்தரவு கொடுப்பர். வேண்டாத வாக்குவாதங்களில்ஈடுபடாமல் பொறுமையுடன் இருப்பது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. புத்திரர்கள் சரியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உதவுவர். அரசியலோடு தொழில் செய்பவர்கள் ஓரளவு லாபம் ஈட்டுவர்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளுக்காக கூடுதல் செலவு, உழைப்பு தேவைப்படும். மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு ஆதாயம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காத்திருக்க வேண்டியிருக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்: ராமர்
பரிகார பாடல்:
கார கார கார கார காவல் ஊழி காவலன்
போர போர போர போரபோரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராம எனும் நாமமே!

No comments:

Post a Comment