Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-ரிஷபம்





கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
அதிர்ஷ்ட வாய்ப்பு, - தாய்வழியில் பிரச்னை


பிறருக்கு நன்மை செய்யும் எண்ணம் நிறைந்த ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 2ல் கேது, 5ல் சனி, 8ல் ராகு என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே2) முதல் ஐப்பசி 21 (நவ.7)வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். குருவின் அனுகூலம் பலமாக உள்ளது. வாழ்க்கையில் இருந்துவந்த சிரமங்கள் நீங்கி சந்தோஷம் காண அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். பணவரவு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். பேச்சில் நிதானத்தை இழக்கலாம். விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாக்க முயற்சி எடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இழக்க நேரிடும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரத் தொடங்கும். இளைய சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். அவர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதலைத் தரும். வீடு, வாகன வகையில் சுமாரான முன்னேற்றத்தை காண்பீர்கள். சிலருக்கு வாகனங்கள் பழுதுபட நேரிடும். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
தாய்வழி உறவினர்களிடம் வேண்டாத வாக்குவாதம், பகை உணர்வு உண்டாகும். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். குருவின் அதிசார பெயர்ச்சியின்போது 7ம் பார்வை புத்திர ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் அவர்களின் செயல்களில் உத்வேகமும் புத்துணர்வும் உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் வெற்றிக்கொடி நாட்டுவர். இதுநாள்வரை இருந்துவந்த சொத்து சம்பந்தமான வழக்கு பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் கூடுதல் வருமானம் உண்டாகும். உடல்நலம் சுமாராக இருக்கும். சரியான நேரத்தில் உணவு உண்பது அவசியம். சில மறைமுக எதிரிகள் உங்களை தொல்லைப்படுத்த நேரிடும். சமயோசிதமாக செயல்பட்டால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். தம்பதியரிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். நண்பர்கள் சரியான தருணத்தில் உதவிக்கரம் நீட்டுவர். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் இனிதாக நிறைவேறும். வராக் கடன்கள் குருவின் நல்லருளால் படிப்படியாக வசூலாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஓரளவே நற்பலன் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் கூடுதல் உழைப்பும் தகுந்த கவனமும் கொண்டால் மட்டுமே ஓரளவு லாபத்தை பெறமுடியும். டெக்ஸ்டைல், தோல், சணல், காகிதம், இரும்பு, எலக்ட்ரானிக் சாதனங்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், வாகனம் சார்ந்த தொழில் செய்வோர், டிராவல்ஸ், கல்வி, நிதிநிறுவனம், மருத்துவமனை நடத்துவோர் ஓரளவே லாபம் பெறுவர். மற்றவர்கள் இவர்களையும் விட குறைந்த லாபமே பெற முடியும். திறமைமிக்க பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால் உற்பத்தியில் வளர்ச்சியும், தரமும் அதிகரிக்கும். நடைமுறை நிர்வாகச் செலவு அதிகமாக இருக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தால் சுமாரான லாபமே கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால், குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியும் பணவரவும் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவு காரணமாக வேலையில் தவறு செய்யக்கூடும். இதன் காரணமாக நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். சலுகைகளை அதிகம் எதிர்பார்க்க இயலாது. கூடுதல் நேரம் பணிபுரிவதாலும், கவனத்துடன் பணியாற்றுவதாலும் உங்கள் பணியை தக்கவைத்துக் கொள்ள
முடியும். சகபணியாளர்களுடன் சீரான நட்பு உண்டு. தேவையான நேரங்களில் உங்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை வைகாசி,ஆவணிமாதத்தில் நிறைவேறக்கூடும். கூடுதல் முயற்சியின் பேரில் மட்டுமே நிலுவைப் பணத்தை பெறமுடியும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, கம்ப்யூட்டர், கட்டுமானப் பொருள், உதிரிபாகங்கள், அழகுசாதனம், பீங்கான், பிளாஸ்டிக்,உணவுப் பண்டங்கள், ஸ்டேஷனரி, பேக்கரி, பலசரக்கு வியாபாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வருமானத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். பிற பொருட்களை விற்பவர்கள் ஓரளவு லாபம் ஈட்டுவர். யாருக்காகவும் பணவிவகாரங்களில் பொறுப்பேற்பது நல்லதல்ல. சரக்கு வாகன வகையில் சராசரி பணவரவு கிடைக்கும். சிலருக்கு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கடன் வாங்க வேண்டி வரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவது மிகவும் அவசியம். மந்தநிலை காரணமாக தாமதம் ஏற்பட்டு அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சிலருக்கு வேண்டாத இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். பணவசதி சீராக இருக்கும். குருபகவானின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புத்திரப் பேறுக்கு அனுகூலமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. வேண்டாத வாக்குவாதங்களிலோ, அடுத்தவர் பிரச்னைகளிலோ தலையிடுவது நல்லதல்ல.
மாணவர்கள்: இன்ஜினியரிங், ஜர்னலிசம், சட்டம், மருத்துவம், விவசாயம், ஓட்டல் மேனேஜ்மென்ட், பிரிண்டிங் டெக்னாலஜி மாணவர்கள் உரிய கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். மற்றவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்கள் நட்புறவு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் மிக எளிதில் கிடைக்கும். பெற்றோருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அரசியல்வாதிகள்: அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள அதிக கவனம் தேவை. வைகாசி, ஆவணி மாதங்களில் எதிர்பார்த்த வகையில் பதவி, பொறுப்பு கிடைக்கும். மறைமுக எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். கடுமையான அலைச்சலால் உடல்நலம் பாதிக்கும். அரசியல் பணி சிறக்க பிள்ளைகள் இயன்றவரையில் உதவுவர். அரசியலோடு தொழில் நடத்துபவர்களுக்கு வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயரும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு வராது. நிலம் தொடர்பான பிரச்னைகளில் மிதமான போக்கினை கடைபிடிப்பது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நிறைவேறும். கால்நடை வளர்ப்பில் பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
வணங்க வேண்டியதெய்வம் கிருஷ்ணர்
பரிகார பாடல்
உலகம் உண்ட பெருவாயா! உவப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
சூழத்தொல்லடியேன் உன் பாதம் கூறுமாறு கூறாயே!

No comments:

Post a Comment