Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன் மீனம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி
(50/100) சங்கடம்
பிறர் துன்பம் கண்டு கருணையுடன் உதவும் மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகுவும், நான்காம் இடத்தில் கேதுவும் கேந்திர ஸ்தானங்களில் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 12, 8ம் இடங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 6, 2ம் இடத்தில் பதிகிறது. ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அனுகூல பலன் தரும் வகையில் இல்லை. உங்கள் பேச்சிலும் செயலிலும் சாந்தம் பரிமளிக்கும். இதன் காரணமாக பிறரது பார்வையும் அன்பும் கிடைத்து சில நன்மைகள் உருவாகும். சகோதரர்கள் சுயதிறமையால் முன்னேறி உங்களுக்கு தேவையான உதவி புரிவர்.
வீடு, வாகனத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். தாயின் மனக்குறைக்கு உங்களின் கவன குறைவு ஒரு காரணமாக இருக்கும். தாயின் அன்பை பெறுவதில் கடமை உணர்ந்து செயல்படுவது நல்லது. குலதெய்வ வழிபாடு நிறைவேற்ற தகுந்த பணவசதியும் உரிய வாய்ப்பும் உருவாகி மனமகிழ்வு பெறுவீர்கள். உடல்நல ஆரோக்கியத்தை மிகுந்த கவனமுடன் பாதுகாக்கவும். குடும்பத்தின் நடைமுறை தேவைகளை நிறைவேற்ற அதிக பணம் தேவைப்படும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்பத்தின் இன்ப துன்பத்தை முழு மனதுடன் பகிர்ந்துகொள்வர். தொழில் சார்ந்த வகையில் எதிர்வரும் குறுக்கீடுகளை சரிசெய்வதால் முன்னேற்றமும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: சிமென்ட், காகிதம், இரும்பு, தோல் தொழில் செய்வோர், கல்விப் பயிற்சி நிறுவனம், மருத்துவமனை நடத்துபவர், மினரல் வாட்டர், எண்ணெய், மாவு, பெயின்ட், மருந்துப் பொருள், மருத்துவ உபகரணம், உடற்பயிற்சி கருவிகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சணல் உற்பத்தியாளர்கள் திறமைமிகு பணியாளர்கள் இல்லாமல் அவஸ்தைப்படுவர். லாபம் சுமார் தான். மற்றவர்களுக்கும் இதே நிலையே. நிர்வாக நடைமுறைச் செலவு அதிகமாகும். நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் எதுவும் வராத அளவிற்கு முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை,கட்டுமானப் பொருட்கள், ரெடிமேட் ஆடை, விவசாய இடுபொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மலர் வகைகள், வாகன உதிரிபாகங்கள், நவீன பர்னிச்சர் வகைகள், ஷாம்பு, ஹேர் டை, அழகு சாதனப் பொருட்கள், கவரிங் நகைகள், மளிகை பொருட்கள், தங்க நகை, உணவு தானிய வகைகள், தேன், மீன், புத்தகங்கள் வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். மற்றவர்களுக்கும் சுமாரான வியாபாரமும் குறைந்த லாபமுமே கிடைக்கும். பொருட்களின் தரத்தை உயர்த்துவதால் விற்பனையில் கூடுதல் முன்னேற்றம் உருவாக வழிபிறக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொழுதை விரயமாக்கும் நபர்களுடன் விலகிச் செயல்படுவது அவசியம். பணி இலக்கு நிறைவேற தாமதமாவதால் நிர்வாகத்தின் நடவடிக்கையும் அதனால் பொருளாதார இழப்பும் ஏற்படும். கல்வி, நிதி, ரசாயன தொழிற்சாலை, பணியாளர்கள், சிரமமான பணிச்சூழ்நிலையிலும் பொறுப்புடன் செயல்படுவதால் நிர்வாகத்தின் நற்பெயரை பெறுகிற நன்னிலை ஏற்படும். சக பணியாளர்களுடன் தகுதிக்கு மீறிய வகையில் பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் வேலைப்பளு உருவாகும் நிலை பெறுவர். புதிய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதால் பணி இலக்கை குறித்தநேரத்தில் நிறைவேற்றலாம். சக பணியாளர்களுடன் சுமூக நட்புறவு திகழும். குடும்ப பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் மனம்அறிந்து உதவிகரமாக செயல்படுவது அவசியமாகும். செலவுக்கு திண்டாட்டமாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான வியாபாரமும், அளவான பணவரவும் கிடைக்கப்பெறுவர். அபிவிருத்தி பணிக்காக தகுதிக்கு மீறிய பணக்கடன் பெறக்கூடாது.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், கேட்டரிங், சட்டம், இசை, ஓவியம், ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், ஆசிரியர் பயிற்சி, சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், மருத்துவம், வங்கியியல், அழகுக்கலை, அரசு நிர்வாகப்பணி பயிற்சி பெறும் மாணவர்கள் பொறுப்புடன் படித்தால் மட்டுமே படிப்பின் நோக்கத்தை பயன் உள்ளதாக மாற்ற இயலும். மற்றவர்களும் சுமாராகவே படிப்பர். அறிமுகம் இல்லாத இடங்களுக்கு தேவையற்ற பயணம் செல்லக்கூடாது. படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். கவனம்.
அரசியல்வாதிகள்: திறமையுடன் சமூகப்பணி புரிந்தாலும் குறை சொல்வதற்கென்று சிலர் வந்து சேருவர். விமர்சனத்தை புறந்தள்ளி செயல்படுவதால் மட்டுமே அரசியலில் பிடித்த இடத்தை தக்கவைக்க இயலும். அரசு அதிகாரிகளிடம் மென்மையான அணுகுமுறை பின்பற்றுதால் முயற்சியின் பலன் பாதியளவாவது கிடைக்கும். எதிரிகளால் பெரிய அளவில் தொல்லை எதுவும் வராது. தொழில் நடத்துபவர்கள் குறைந்த வியாபாரமும் அதற்கேற்ற வகையில் பணவரவும் பெறுவர்.
விவசாயிகள்: விவசாய பணிகளில் தேக்கநிலை ஏற்படும். மனம் தளராமல் பணிபுரிவதால் சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு வரும். நிலம் தொடர்பான பிரச்னை பெரிய அளவில் தொல்லை தராது.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
பரிகார பாடல்
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம்
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம்
ஓம் பந்தள மாமணியே சரணம்
ஓம் எரிமேலி சாஸ்தாவே சரணம்

No comments:

Post a Comment