Oct 12, 2010

மிதுன ராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி



மிதுனராசியில் பிறந்த நீங்கள் கோபம் வரும்போது கூட சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் மனதில் பழி உணர்ச்சியைப் பதித்துக் கொள்வீர்கள். குதர்க்கமும் கிண்டலும் கொண்ட வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவீர்கள். தந்திரமாகப் பேசும் காரியவாதி. நீங்கள் பிறரை எளிதில் நம்பமாட்டீர்கள். சந்தேகப் பேர்வழி. நயமாக - பணிவாகப் பேசியே உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளித் தோற்றத்திற்கு அப்பாவிபோல இருப்பினும் மனதில் உயர்ந்த ஹீரோ என்றும்; புத்திசாலி என்றும் நினைப் பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாததைப் போல சொன்ன சொல்லையும் காப்பாற்ற மாட்டீர்கள்! எதிலும் புதுமை தேவை என்று அடிக்கடி கூறுவீர்கள். உடம்பு என்றும் இளமையுடன் இருக்க பயிற்சி செய்வீர்கள்.

பெண்களிடம் பேசுவதற்கும் அவர்களுடைய நட்பைப் பெறுவதற்கும் முயற்சி செய்து வருவீர்கள். அவர்களை நம்பிக்கைக்கு உரியவராகச் செய்வதிலும் கெட்டிக்காரர்தான். பல பெண்களின் நட்பும் அவர் களால் பல ஆதாயங்களையும் பெறுவீர்கள். நீங்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். வெளியில் பார்ப்பதற்கு தைரியசாலி போல தோன்றினாலும் மனதுக்குள் கோழை! சிறிய விஷயமானாலும் பிறர் உதவியை நாடுவீர்கள். மற்றவரின் அபிப்பிராயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். ஆனால் உங்க ளுடைய எண்ணத்தை யாரிடமும் கூறமாட்டீர்கள். நீங்கள் மழுப்பிப் பேசியே காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களால் கோபத்தை மட்டும் அடக்க முடியாது. எவ்விஷயத்தையும் தோண்டித் துருவி ஆராயும் மனம் கொண்டவர். ஆனால் உங்கள் மனதில் சந்தேகமும் பயமும் எப்பொழுதும் இருக்கும். 3-ல் இருந்த சனியால் மனதில் இனம்புரியாத கவலைகள், வேதனைகள் இருந்தன. உடலிலும் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படலாம். பணப்பிரச்சினை இருந்தது. மருத்துவச் செலவு, குடும்பத்திற்காகத் தேவையில்லாத வீண் செலவுகள் அடுத்தவர்க்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு அதனால் பல வகையாலும் விரயங்கள் - இப்படிப் பல சிரமத்திற்கு உள்ளானீர்கள். எங்கும் யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். அதேபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் அனுகூலமும் பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும்.

வாங்கிய இடத்தில் கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுவீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு வருகிறார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். 4-ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் உடல் நலக்குறைவும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படும். தாயாருக்கு மனச் சஞ்சலங்களும் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். மனதிற்குள் இனம் புரியாத பயமும், வேலையில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. வீடு, வண்டி வாகனம் ஆகியவற்றில் பழுதுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலை தேடிக் கிடைக்காமல் அலைக்கழிக்க வைக்கும்.

மூத்த சகோதரத்திற்குப் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்பட்டுத் தீரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் ஏதேனும் ஒரு கவலை குடிகொண்டிருக்கும். இதனால் மனச்சோர்வு உண்டாகி உடலிலும் தெம்பு இல்லாமல் மிகவும் மெலிந்து காணப்படுவீர்கள். உடலில் என்ன நோய் உள்ளது என்பதை அறிய முடியாமல் இருக்கும். குடும்பத்தில் அன்னியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாத சூர்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்தை விரயம் செய்யும் நிலை உண்டாகும். இல்லையெனில் பூர்வீகச் சொத்தில் வில்லங்கமும் வம்பு, வழக்குகளும் உண்டாகும். வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தால் அதில் காலதாமதம் உண்டாகும். கடன் கொடுத்த இடத்தில் பணம் சீக்கிரம் வந்து சேராது. முன்பு உதவி செய்தவர்கள்கூட தற்போது உதவி செய்யத் தயங்குவார்கள். உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் மந்த நிலையும், இடம் மாறி வேலை செய்யும் சூழ்நிலையும் உண்டாகும். மேலதிகாரிகள் உங்களை வேலையில் இருந்து விலக்கும் சூழ்நிலையும் அல்லது அவமரியாதை ஏற்படும் நிலையும் உண்டாகும். தீய பழக்க - வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலை உண்டாகும்.

கணவன் - மனைவி இடையிலான உறவு சுமூகமாக இருந்துவரும். குடும்பத்தில் சிறுசிறு பூசல்களும், பிள்ளைகளால் விரயச் செலவும் உண்டாகும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்களிடம் வலிய வந்து பிரச்சினையை உருவாக்குவார் கள். ஆதலால் மற்றவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது சிறந்தது. தெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து செய்து வருவது நல்லது. தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் நெருங்கிய உறவினரைப் பிரிய அல்லது இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிம்மதியான உறக்கம் என்பது குறைவே!

சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 4-ஆம் இடத்துக்கு வந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செய்தொழிலில் சிறப்பும், நிலையான தொழில் அமையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழிலில் லாபமும்- அதே சமயம் அந்த லாபம் முழுதும் கடனை அடைக்கவே சரியாக இருக்கும். மீதி என்று எதுவும் இருக்காது. சிலர் கடன் வாங்கி வீட்டிற்குத் தேவை யான ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். கல்வியில் சிறிது தடை உண்டாக வாய்ப்புண்டு. பிள்ளைகள் படிப்பில் கவனம் இல்லாமல் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஊர் சுற்ற வாய்ப்புண்டு. படிப் பில் மந்தத்தன்மையும் மறதியும் உண்டாகும். கவனமாகப் படித்தால் வெற்றி நிச்சயம். வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரியிடம் பகைமை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொதுவாக சனி பகவான் பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் என சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால் வம்பு, வழக்கு, கடன், பகை, நோய் ஆகியவற்றை அழிப்பார் என்று பொருள். அதாவது கடன் ஏற்பட்டால்தானே கடன் நிவர்த்தி ஆகும். வம்பு, வழக்கு போன்றவை உண்டாகி பின் மறையும். இருக்கின்ற நோயும் தீரும்! எதிரிகள் தானே பயந்து ஒதுங்கிவிடுவார்கள். சிலருக்கு உத்தி யோகத்தை விட்டு சுயமாகத் தொழில் தொடங்கும் நிலையும் உண்டா கும். தொழிலுக்காக எங்கு கடன் கேட்டாலும் தயங்காமல் தருவார்கள்.

சனி பகவான் ஏழாம் பார்வையாகப் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் தொழிலில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பலரின் பாராட்டும் கிடைக்கும். இருப்பினும் சிலர் உங்கள்மீது பொறாமை கொண்டு உங்களைப் பற்றி மேலதிகாரிகளிடம் அல்லது முதலாளிகளிடம் தவறான தகவல்களைத் தருவார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் நடக்காமல் உங்களைப் பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். இது உங்கள்மீது பொறாமை கொண்டவர்களுக்குத் தலைகுனிவை உண்டாக்கிவிடும். சனிபகவான் பத்தாம் பார்வையாக உங்களது ராசியைப் பார்ப்பதால் உங்கள் உடல்நலனில் பாதிப்பு உண்டாகலாம். எந்தச் செயலையும் உடனடியாகச் செய்து முடிக்க முடியாமல் மந்தத் தன்மையுடன் காணப்படுவீர்கள். பல் சம்பந்தமான நோய் உண்டாக வாய்ப்புண்டு. எப்பொழுதும் ஏதாவது ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

மிதுன ராசிக்கு 3-க்குடைய சூரியன் சாரத்தில் 2009- செப்டம்பர் முதல் சுமார் பத்து மாத காலம் சனி சஞ்சாரம் செய்வார். தொழில் ஸ்தான மான மிதுனத்துக்கு 6-க்குடையவர் சூரியன். அவர் சாரம் பெறுவதால் தொழில் துறையில் தொய்வு நிலையும் மந்தகதியும் ஏற்படும். போட்டி பொறாமைகளைச் சந்திக்கக்கூடும். இருப்பிடத்திலும் சச்சரவுகள் தோன்றி அதிருப்தி அடையச் செய்யும் கடன் பெரும் பாதிப்பை உண்டாக்காது என்றாலும், மனதுக்குப் பாராமாகத் தோன்றும். வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையை உண்டாக்கும். சூரியன் வீடான சிம்மராசிக்கு 2-ல் சனி நிற்பதால் பொருளாதாரத் தட்டுப்பாடு இல்லாமல் பணவரவு - செலவு தாராளமாக அமையும். சனி நிற்கும் கன்னிராசிக்கு 5, 6-க்குடையவர் என்பதால் மனதில் வகுத்த திட்டங்கள் நிறைவேறும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாதங்கள் சனி பகவான் மிதுனராசிக்கு 2-க்குடைய சந்திரன் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். சனி நிற்கும் கன்னிராசிக்கு சந்திரன் 11-க்கு உடையவர். எனவே தாராளமான வரவு- செலவு இயக்கமும் பணப்புழக்கமும் உண்டாகும். போட்டி பொறாமைகளையும் எதிர்ப்பு இடையூறுகளையும் ஜெயித்து வெற்றி பெறலாம். மூத்த சகோதரர், இளைய சகோதரர் வகையில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் சொல்வாக்கு இனி செல்வாக்குப் பெறும்! சந்திரன் தாயார் கிரகம், தன் உடலைக் குறிக்கும் கிரகம். எனவே தாயார் அல்லது தன் சரீர இயக்கத்தில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செம்டம்பர் முதல் ஆறு மாத காலம் சனி பகவான் மிதுன ராசிக்கு 6, 11-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பார். சனி 6-ஆம் பாவத்துக்கு பதினொன்றிலும், 11-ஆம் பாவத்துக்கு ஆறிலும் இருக்கிறார். அதனால் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ருஜெயம் ஆகிய நற்பலன்களைத் தருவார். இவை எல்லாம் முதலில் உண்டாகி பிறகு அவை எல்லாம் நிவர்த்தி ஆகும். செய்முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். தொழில் வகையில் லாபம் கிடைக்கும். பாடுபட்டதற்குப் பலன் உண்டாகும். வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அனுபவித்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் விடிவுகாலம் ஏற்படப் போகிறது. வாழ்க்கையில் இதுவரை வீசிய புயல் அடங்கி புயலுக்குப்பின் அமைதியாக - தென்றல் தவழும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி போட்டி பொறாமைகளையும் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடையும் தாமதமும் உண்டாக்கினாலும், உங்கள் விடாமுயற்சியினால் படிப்படியாக முன்னேறி காரியத்தை நிறை வேற்றலாம். உற்றார்- உறவினர், சுற்றத்தாரின் திருஷ்டிகளைச் சமாளிக்க வேண்டும். எதிர்பாராத வைத்தியச் செலவுகளையும் சந்திக்க நேரும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி ஆரம்பத்தில் வீண் கவலை, சஞ்சலம், ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அடுத்து மகிழ்ச்சியையும் வெற்றியும் உண்டாக்கி சமப்படுத்திவிடும். பொருளாதாரத்தில் நெருக்கடி இருக்காது. ஆனால் ஈகோ - கௌரவப் போராட்டம் இருக்கும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி தெய்வ பலத்தாலும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் நினைத்ததை நிறைவேறச் செய்யும். கடல் கடந்த பயண வாய்ப்பும் அதனால் நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்

தேனி- சின்னமனூர் அருகிலுள்ள குச்சனூர் சென்று சனி பகவானை வழிபடவும். அர்த்தாஷ்டமச் சனி தோஷம் விலகும்.

No comments:

Post a Comment