Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -சிம்மம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


மகம், பூரம், உத்திரம் - 1
+ ஏழரையின் தாக்கம் குறையும்
- அதிகாரிகளுடன் மோதல்
சோதனைகளையும் சாதகமாக மாற்றும் திறனுடைய சிம்ம ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 3,5,7 ம் இடங்களைப் பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சி உங்களின் செயல்பாடுகளில் வெற்றியைத் தரும். ஏழரைச் சனியினால் ஏற்பட்டு வரும் கெடு பலன்களை குறைத்து ஆறுதல் தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். இளைய சசோதரர்கள் ஓரளவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வர். வீட்டில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தாய்வழி உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். எதிரிகளால் ஏற்படும் துன்பம் கட்டுக்குள் இருக்கும். உடல்நலக்குறைவு சரியாகி விடும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.
மின்சாரம், பயணம் தொடர்பான இனங்களில் கவனமாக இருக்க வேண்டும். மூத்த சகோதரர்கள், உங்கள் பணநிலை வளர உதவி செய்வர். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூலமும், தாராள பணவரவும் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு பணச்செலவு அதிகரிக்கும்.
தொழில்: தொழில்சார்ந்த வகையில், கூடுதல் முன்னேற்றமும், தாராள பணவரவும் கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், பீங்கான், பிளாஸ்டிக், பால்பொருட்கள், இசைக்கருவி, அழகுசாதனப்பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, சோப்பு, இரும்பு, காகிதம், தோல் தொழில் சார்ந்தவர்கள் கூடுதல் உற்பத்தியால் ஆதாயம் காண்பர். தொழில் சார்ந்த அமைப்புகளில் கவுரவப்பதவி சிலருக்கு கிடைக்கும். உபதொழில் துவங்கவும் வாய்ப்பு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர்.
வேலை: அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த சலுகைகள் வந்து சேரும். அதிகாரிகளுடன் அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களிடம் அடங்கிச் செல்வது நல்லது. சகபணியாளர்களுடன் நல்அன்பு வளரும்.
வியாபாரம்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நகை, ஜவுளி, மளிகை, அடுப்பு, பட்டாசு, பர்னிச்சர், அழகுசாதனப்பொருட்கள், காகிதம், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கட்டுமானப் பொருள், சோப்பு வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் விற்பனையும், சேமிக்கும் அளவு உபரி வருமானமும் காண்பர். சரக்கு வாகனத்தின் மூலமாகவும் பணவரவு கிடைக்கும். சந்தையில் இருந்த போட்டி குறையும். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள், சுறுசுறுப்பாகவும், விவேகத்துடனும் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். நிர்வாகத்திடம் நன்மதிப்பு கிடைக்கும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பணக்கடன் போன்றவை பெறலாம். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும், சீரான பொருளாதார வசதியும் பெற்று குடும்பத்தை சந்தோஷ பாதையில் வழி நடத்துவர். ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய்வழி உறவினர்களுக்கு உரிய மரியாதையும், தேவையான உதவியும் புரிவீர்கள். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். வியாபாரம் அதிகமாகி லாபம் பணவரவு அதிகரிக்கும்.
படிப்பு: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மரைன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், சினிமா தொழில்நுட்பம், மாடலிங், நிதி மேலாண்மை, நிர்வாகப் படிப்புகள், கேட்டரிங், கம்ப்யூட்டர் அனிமேஷன், தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்கள் ஆர்வமுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும். சக மாணவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை திறம்பட வகுத்து லட்சியத்துடன் செயல்புரிந்து வெற்றி இலக்கை அடைவர். ஆதரவாளர்களின் உதவியுடன் புதிய பதவிப்பொறுப்புகளை பெறுவீர்கள். புத்திரர்களும் அரசியல்பணி சிறக்க உதவுவர். எதிரிகளே வியப்படையும் வகையில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
விவசாயம்: விவசாயிகளுக்கு அதிக மகசூலும், உபரி பணவருமானமும் வந்து சேரும். கால்நடை வளர்ப்பிலும், முன்னேற்றம் உண்டு. நிலம் தொடர்பான சிரமம் இருந்தால் விலகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரப் பாடல்
புத்தியும் பலமும் தூய புகழோடு
துணிவும் நெஞ்சில் பக்தியும்
அச்சமிலாப் பணிவும் நோய் இல்லா
வாழ்வும் உத்தம ஞானச்சொல்லின்
ஆற்றலும் இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே!

No comments:

Post a Comment