Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -மேஷம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். இதையொட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலனைக் கணித்துள்ளார் ஜோதிடமாமணி மதுரை சங்கர்ஜி.


அசுவினி, பரணி, கார்த்திகை 1
+ பணவரவு அதிகரிக்கும்
- மூத்த சகோதரர்களுடன் பிரச்னை
தைரியம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 11ம் இடமான கும்பத்தில் அமர்வுபெறுகிறார். தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகள் நிறைந்து உயர்வு உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இளைய சகோதரர்கள் பாசத்துடன் உதவி செய்வர். ஆனால், மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வீடு, வாகன வகையில் தேவையான மாற்றம் செய்வீர்கள். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
பூர்வீக சொத்தில் ஆதாய பணவரவு உண்டாகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். எதிரிகள் விலகிச் செல்வர். உடல்நலம் நன்றாக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேறும். நண்பர்களின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அனுகூலமும் தாராள பணவரவும் கிடைக்கும்.
தொழில்: தங்க நகை, மருத்துவ உபகரணங்கள், மோட்டார் வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கிரானைட் கற்கள், கட்டுமான பொருட்கள், பர்னிச்சர், உணவு பொருட்கள், ஜவுளி, விவசாய இடுபொருட்கள், இரும்பு, காகிதம் சார்ந்த தொழிலதிபர்கள் தொழிலில் வளர்ச்சியும் அதிக உற்பத்தியும் தாராள பணவரவும் கிடைக்கப்பெறுவர். லாபம் அதிகரிக்கும். தொழிற்சாலை அபிவிருத்திப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். ரியல் எஸ்டேட், நவீன மருத்துவமனை, தங்கும் விடுதிகள், தொழில்நுட்ப பயிற்சி, கல்லூரி நடத்துபவர்கள் கூடுதல் வளர்ச்சியும் உபதொழில் துவங்குவதுமான நன்னிலை பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக கிடைக்கும்.
வேலை: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் எளிதாக கிடைக்கும். தகுந்த சமயத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி சந்தோஷப்படுவீர்கள். சிலர் எதிர்காலத்தேவை கருதி கொஞ்சம் சேமிக்கவும் இடமுண்டு.
வியாபாரம்: நகை, ஜவுளி, தான்யம், மளிகைப் பொருட்கள், சமையலறை சாதனங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இறைச்சி, விவசாய இடுபொருட்கள், மருந்து, எண்ணெய், அழகுசாதனப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், காய்கறிகள், குளிர்பானம் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கும் இவர்களை விட அதிக லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் துவங்க வாய்ப்புண்டு. புது வியாபாரமும் தொடங்கலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். பணி உயர்வு, விண்ணப்பித்த கடன், விரும்பிய பணியிட மாற்றம் ஆகிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பப் பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து சந்தோஷ வாழ்வு காண்பர். பணவரவு சிறப்பாக இருக்கும். கணவரின் ஒத்துழைப்பும் குடும்ப வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புத்திரப்பேறு வகையில் அனுகூல பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் போட்டி குறைவதால் உற்பத்தியிலும் விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் காண்பர். கூடுதல் பணவரவால் சேமிக்க வாய்ப்பு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள்.
படிப்பு: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல், வங்கியியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மாடலிங், ஜர்னலிசம் பயிற்சி பெறும் மாணவர்கள் திறம்பட செயல்பட்டு தேர்ச்சி பெறுவர். படிப்பு முடித்தவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் சிறப்பாகப் படித்து நல்ல மார்க் வாங்குவார்கள். கல்வி கடனுதவி சரியான நேரத்துக்கு கை கொடுக்கும். பெற்றவர்கள் பாராட்டும்படியான நிலையால் படிப்பில் ஆர்வம் மேலும் பெருகும். சிலர் விளையாட்டிலும் பரிசு பெறும் யோகமுண்டு.
அரசியல்: அரசியல்வாதிகளுக்கு ஆதரவாளர்களின் ஆதரவு பெருகும். புத்திரர்களின் செயல்பாடு அரசியல் பணிக்கு உதவுவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவிப் பொறுப்பு வந்து சேரும். எதிரிகளால் இருந்த தொல்லை பெருமளவில் குறையும். தலைமையிடம் நல்ல பெயர் உண்டாகும்.
விவசாயம்: பயிர்வளம் செழித்து அபரிமிதமான மகசூல் கிடைக்கும். அதிக பணவரவை சேமித்து வைப்பார்கள். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். புதிய கூடுதல் நிலம் வாங்க குருவின் அருள் பலமாக உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம்: ரங்கநாதர்
பரிகாரப் பாடல்
பச்சைமா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

No comments:

Post a Comment