Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1
பணவரவு அதிகரிப்பு , - பிள்ளைகளால் பிரச்னை


அன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றில் கேது, ஆறில் சனி, ஒன்பதில் ராகு அமர்வு பெறுகின்றனர். இந்த அமர்வு ஆண்டு முழுவதும் தொடர்கிறது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக மே 2 முதல் நவம்பர் 7 வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். இதனால் குருவின் அனுகூல பலன்கள் சுமாராக இருக்கும். மிதுனத்தில் உள்ள மூன்றாமிட கேதுவால் முருகனின் பரிபூரண அருளும், பொருள் லாபமும் உண்டாகும். இளைய சகோதரர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை வளம்பெற உதவிக்கரம் நீட்டுவீர்கள். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகமும் உண்டு. ஏற்கனவே நடந்து வரும்
கட்டடப்பணிகள் தங்கு தடையின்றி நடக்கும். இதற்காக விண்ணப்பித்த கடன்தொகை வந்து சேரும். புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு ஏமாற்றத்தை தரும். அவர்களுடைய படிப்பு நிலையும் சுமாராகவே இருக்கும். தக்க சமயத்தில் சரியான அறிவுரைகளை வழங்கி வழிகாட்டுங்கள். பூர்வ சொத்தில் பணவரவு நன்றாக இருக்கும்.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். உடல்நல ஆரோக்கியம் மனதிற்கு உற்சாகத்தை தரும். நீண்டகாலமாக தொடர்ந்த வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர இவ்வாண்டில் வாய்ப்புண்டு. பொருளாதார நிலை சிறக்கும். அதனால் கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் கருத்து மோதல் ஏற்பட்டு விலகும். இவர்களிடம் பிரச்னை செய்யாமல் விலகி இருப்பதன் மூலம் சட்டச்சிக்கல் போன்றவற்றைத் தவிர்க்கலாம். யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேளுங்கள். ஆனால், உங்கள் மனதிற்கு சரியெனப் பட்டதை செய்வதே நன்மைக்கு வழிவகுக்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படக் கூடும் என்பதால் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் சுமாரான அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: மருத்துவ உபகரணங்கள், வாகனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமான பொருட்கள், உணவுப் பொருட்கள், டெக்ஸ்டைல், ரசாயன பொருட்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு, காகிதம் சார்ந்த தொழிலதிபர்களுக்கு போட்டி குறையும். அதிக உற்பத்தியும், தாராள லாபமும் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். அரசு சார்ந்த வகையில் அனைத்து உதவிகளும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மருத்துவமனை, லாட்ஜ், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் கூடுதல் வளர்ச்சியும், உபதொழில் தொடங்குவதற்கான சூழலையும் பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கும் ஓரளவு லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, சமையலறை சாதனம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், இறைச்சி, மருந்து, எண்ணெய், அழகு சாதனப் பொருள், வாகன உதிரி பாகம், காய்கறி, தண்ணீர் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களைவிட அதிக லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் துவங்க வாய்ப்புண்டு. வியாபார அபிவிருத்திக்கான பணக்கடன் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் எளிதாக கிடைக்கும். தகுந்த சமயத்தில் கடன் உதவி, வேண்டிய இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி சந்தோஷப்படுவீர்கள். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு உண்டாகும். பணிகளை குறித்தநேரத்தில் நிறைவேற்றி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சிலருக்கு, அலுவலகம் சார்ந்த பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் உங்களுக்கு பணபலனும் கிடைக்கலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவர். பணி உயர்வு, கடன் உதவி, இடமாற்றம் ஆகிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். குடும்ப பெண்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு சந்தோஷம் காண்பர். பணவரவு சிறப்பாக இருக்கும். கணவரின் ஒத்துழைப்பு குடும்ப வளர்ச்சிக்கு கைகொடுக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வர். தாய்வீட்டு உதவிகளால் புகுந்தவீட்டில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனம் மகிழ்வீர்கள்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், வணிகவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், மாடலிங், ஜர்னலிசம், தோட்டக்கலை, டிரைவிங் பயிற்சிபெறும் மாணவர்கள் திறம்பட செயல்பட்டு தேர்ச்சி பெறுவர். படிப்பு முடித்தவர்களுக்கு தகுதியான இடத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண் பெறுவர். கல்விக்கடன் உதவி சரியான நேரத்திற்கு கைகொடுக்கும். பெற்றோர் மகிழும்படி கல்வி ஆர்வம் பெருகும்.
அரசியல்வாதிகள்: எதிரியால் இருந்த தொல்லைகள் விலகி அரசியலில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். புத்திரர்களை அரசியல் பணியில் அளவுடன் ஈடுபடுத்துவது நல்லது. ஆதரவாளர்களிடம் கூடுதல் நம்பிக்கை பெறுவீர்கள். தலைமையிடம் நல்ல பெயர் உண்டாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு அபிவிருத்தியும் உபரியான வருமானமும் கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகள் சிறந்து அபரிமிதமான மகசூல் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். கால் நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். நவீன உழவுக்கருவிகள், வாகனங்கள் வாங்கும் யோகமுண்டு.
வணங்க வேண்டிய தெய்வம் : சிவன்
பரிகார பாடல்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
இமையாது உயிராய் இருந்தாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!!

No comments:

Post a Comment