Oct 12, 2010

கடக ராசி அன்பர்களேசனி பெயர்ச்சி

கடக ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பு கொண்ட வர். உங்களை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. விழிப்புணர்ச்சியுடன் இருப்பீர்கள். எவ்வளவு நஷ்டம், கஷ்டம் வந்தாலும் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர். கூட்டாளி சேர்க்கையால் புதிய பழக்க- வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சிலகாலம் போதை வஸ்துகளுக்கு அடிமையாவீர்கள். பிறந்த இடம் விட்டு வனவாசம் மாதிரி வெளியிடத் தில் வாழ்வீர்கள். அப்படி வாழ்வதே முன்னேற்றம் தரும்! இளமைக் காலத்தில் கல்வி தடைப்படும். சிறப்பாகப் பயில இயலாது; பயின்றாலும் பலன்கள் இராது. பிறகு படிப்பைத் தொடரலாம். சகோதரர்களுடன் இளமை யில் ஒற்றுமையுடன் வாழ்வீர்கள். ஆனால் காலப்போக் கில் பண விவகாரத்தில் பிரிவு ஏற்பட்டு பிறகு ஒன்று சேர்வீர்கள். அன்னையின் அரவணைப்பு இளமைக் காலம் வரை தொடரும். உங்களுக்கென்று வாழ்க்கை ஏற்பட்டு தாய், தகப்பன் ஒற்றுமை குறைந்து தனிக்குடித் தனம் அமையும்போது வேறுபடும். தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வீர்கள். புத்திர விருத்தி உண்டு. அவர்களிடம் சுயநலமும் அவசர புத்தியும் கொண்ட சிக்கனவாதி எனப் பெயர் வாங்குவீர்கள். நீங்கள் பெற்ற புகழ், பெயர், அந்தஸ்தை உங்கள் வாரிசுகளால் பெற முடியாது. எந்தக் குடியில் பிறந்திருந்தாலும் மக்கள் மத்தியில் நன்கு தெரிந்தவர்களாக இருப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செய்ய ஆர்வம் கொண்டிருப்பீர் கள். மக்களுக்குப் பொதுத் தொண்டு செய்யவும், பொதுமக்களிடையே கலந்து உறவாடவும் விரும்புவீர் கள். ஊருக்காக உழைப்பவர் நீங்கள்! உயர்ந்த கல்வி இல்லை என்றாலும், அறிவு, திறமை, ஞானம் இயற்கை யாகவே பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு ஞாபகசக்தி அதிகம். நீங்கள் எக்காரியத்தையும் விரைவாக முடிப்பீர்கள். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதைச் சுலபப் படுத்தி சீக்கிரம் முடிப்பீர்கள். நீங்கள் எக்காரியத்தைத் தொடங்கினாலும் ஆரம்பத்தில் தோல்வி அடைந்தாலும் விடாமல் அதீத முயற்சி செய்து அக்காரியத்தை முடித்து வெற்றி அடைவீர்கள். எவ்விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் பல முறை தீர ஆலோசனை செய்து அக்காரியத்தில் இறங்குவீர்கள். அப்படி இறங்கிவிட்டால் அக்காரியத்தை முடிக்கும் வரை தூக்கம் வராது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து நின்று வெற்றி காண்பீர்கள்.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு 2-ஆம் இடத்தில் இருந்து 3-ஆம் இடத்துக்கு வருவது நல்ல யோகம். நன்மைகள் கிடைக்கும்! தைரியமும் நம்பிக்கையும் கூடும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதை நிறைவேற்றும்வரை ஓயமாட்டீர்கள்! வசதி வாய்ப்பு அதிக மாகும். நண்பர்கள், உறவினர்கள் நெருங்கி வருவார்கள். இதுவரை உங்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கி கௌரவமும் மரியாதையும் கூடும். புதிய தொழில் தொடங்க முனைவோர் முதலீடு இல்லாமலேயே தொழில் தொடங்க தாராளமாக வழிவகை பிறக்கும். வேலையில் மனதிற்குப் பிடித்த இடத்தில் மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். பலரும் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல உதவிகள் கிடைக்கும். நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் ஆபரண- ஆடை சேர்க்கை உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மிக விரைவாகத் தடையின்றி நடக்கும். தன - தான்ய விருத்தியும் உண்டாகும். எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். திருமணம் ஆகாதவர் களுக்குத் திருமணம் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். சிலருக்கு (படிக்கும் மாணவர்களுக்கு) உடல்நலக் குறைவால் படிப்பில் நாட்டம் செலுத்த முடியாமல் கல்வியில் தடை உண்டாகவும் வாய்ப் புண்டு. தெய்வ நம்பிக்கை அதிகமாகும். போட்டி, பந்தயம் போன்றவற் றில் உங்களுக்குச் சாதகமான முடிவுகளே ஏற்படும். பிற மதத்தவரால் நன்மைகன் உண்டாகும். சுகமான தூக்கமும் திருப்தியான போஜனமும் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாகனப் பரிவர்த்தனையும் ஏற்படலாம். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வருவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும்.

பதவி உயர்வை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் உடனடியாகப் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு, வழக்கு போன்றவை உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். அதில் வெற்றியும் உண்டாகும். பெண்களால் இன்பமும் ஆதாயமும் கிடைக்கும்.

அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் நன்மையும் பதவி உயர்வும் அடைவார்கள். பெரியோர்களுக்கு உடல்நலம் பாதிக்கப் படலாம். கமிஷன், காண்ட்ராக்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். சகோதரர்களால் பலப்பல உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். ஸ்ரீ சனி பகவான் மூன்றாம் பார்வையாக உங்களது ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். இதனால் பூர்வீகச் சொத்தில் சில பிரச்சினைகளும் வில்லங்கமும் உண்டாகும்.

குழந்தை யோகமும் உண்டாகும். பிள்ளைகளால் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். பிறரிடம் கொடுத்து வைத்த சொத்துக்களை அவர்கள் பேரில் எழுதி வைத்துக் கொண்டு உங்களை ஏமாற்ற வாய்ப்புண்டு. ஆதலால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், சில நன்மைகளும் உண்டாகும் என எதிர்பார்க்கலாம். ஸ்ரீ சனி பகவான் ஏழாம் பார்வையாக ஒன்பதாமிடத்தைப் பார்ப்பதால் தந்தைக்குச் சிறப்பாக இருக்கும். தாய்-தந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருப்பார்கள். பலகாலமாகப் பிரிக்காமல் இருந்த சொத்துக்களுக்குத் தற்போது ஒரு முடிவு கிடைக்கும். நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த பிரார்த்தனைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்! தெய்வீக ஆலயங்களுக்குப் பயணம் போகலாம். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியிடங்களுக்குச் செல்லும் நேரம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதனால் ஆதாய மும் இருக்கும். ஸ்ரீ சனி பகவான் 10-ஆம் பார்வையாக பன்னிரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் வீண் விரயங்கள் அதிகமிருக்கும். புதிய வீட்டிற்குக் குடி போக வாய்ப்பு உண்டு. சிலர் பழைய வீட்டை இடித்துப் புதிதாகக் கட்டிக் குடிபோக வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும் உண்டாகும். இரவு அதிக நேரம் கண்விழித்திருக்ககூடிய சூழ்நிலை உருவாகும். வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் இருந்து கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இதனால் உடல் சோர்வும், டென்ஷனும் இருக்கும். வரவு, செலவு போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது. இல்லையெனில் உங்களுக்குத் தெரியாமல் பணம் காணாமல் போகும் நிலை உருவாகி விடும்.

கடகத்துக்கு 7-க்குடைய சனி அந்த 7-ஆம் இடத்துக்கு 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் கணவருக்கும் - கணவரால் மனைவிக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். அவர்களை இணைத்துக் கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.

கடக ராசிக்கு 8-க்குடையவர் அதற்கு 8-ல் மறைந்தாலும், 8-க்கு 8- ஆயுள் விருத்தி உண்டாகும். 6-ஆம் இடத்துக்கு கேந்திரத்தில் சனி நிற்பதால் சத்துருக்களும் மறைமுக எதிர்ப்பு இடையூறுகளும் உருவாக இடமுண்டு. என்றாலும் 11-ஆம் இடம் ஜெயஸ்தானமான ரிஷபத்துக்கு திரிகோணம் பெறுவதால் 6-ஆம் இடத்துத் தொல்லைகளை எதிர்த்து ஜெயித்துவிடலாம். அதற்காகச் செலவுகள் உருவாகும் என்பதை ராசிக்கு 12-ஆம் இடத்தை சனி பார்க்கும் பலனாகக் கருதலாம். மேலும் அக்டோபர் மாதம் 6-ல் ராகு, 12-ல் கேது வருவதும் உங்களுக்கு அனுகூலமான திருப்பத்தை உருவாக்கும். பாபஸ்தானத்தில் பாபகிரகங்கள் அமர்ந்தால் அந்த பாபத் தன்மை அழிந்துவிடும் அல்லவா? அதாவது கெட்ட இடத்தில் உள்ள கெட்ட கிரகங்கள் அந்த இடத்தைக் கெடுப்பதால் ஜாதகர்களுக்கு நன்மை உண்டாகும்!

பொதுவாக 3, 6, 11-ஆம் இடங்கள்தான் சனி பகவானுக்கு யோகமான இடங்கள். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்க, கூறுபொன் பொருண்டாம். குறைவிலாச் செல்வம் உண்டாம். ஏறும் பல்லக் குண்டாம். இடம்பொருள் ஏவலுண்டாம். காறுபால் அஷ்டலட்சுமி கடாட்சமும் உண்டாகும்' என்பது புலிப்பாணி பாடல். அதனால் இந்த சனிபெயர்ச்சியால் அதிஅற்புத யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையப்போகும் அதிர்ஷ்டசாலிகள் மூன்றுபேர் - கடக ராசி - விருச்சிக ராசி, மேஷ ராசியாகும். அதில் நீங்களும் ஒருவர்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

26-9-2009 முதல் பத்து மாத காலம் கடக ராசிக்கு 2-க்கு உடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். இக்காலம் குரு கடகத்துக்கு 8-ல் மறைந்தாலும் சூரியன் வீட்டைப் பார்க்க போவதால் தனம் தான்யம், சம்பத்து யோகம் உண்டாகும். வாக்கு மேன்மை உண்டாகும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஆனந்தமும் பெருகும். சுபமங்கள விசேஷ நிகழ்ச்சிகளும் நடக்கும். மாணவர்களுக்கு படிப்பு, வித்தை யோகம் பிரபலமாகும். 2-ஆம் இடம் நேத்திர ஸ்தானம் என்பதால் சிலர் கண்ணாடி போடவும் கண் ஆப்பரேஷன் செய்யவும் நேரும். பேச்சாற்றல் பெருகும். அரசியல்வாதிகளுக்கும் அரசு உத்தியோகம் புரிகிறவர்களுக்கும் இக்காலம் நற்காலம்! பொற்காலம்!

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜுலை முதல் 14 மாத காலம் (2011- செப்டம்பர் வரை) சனி பகவான் உங்கள் ராசிநாதன் ஆகிய சந்திரன் சாரத்தில் சஞ்சாரம் செய்வார். உங்கள் செயல்பாடுகளினால் பேரும் புகழும் சீரும் சிறப்பும் செல்வாக்கும் அடையலாம். தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு முன்னேறுவீர்கள். விரும்பிய இடப்பெயர்ச்சி, பதவி உயர்வு, பாராட்டுக் கள் பெறலாம். கூட்டுத் தொழில் லாபம் பெருகும். பொதுநலத் தொண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபாடும் கௌரவப் பதவிகளும் தேடிவரும். ஏழரைச் சனியில் ஏற்பட்ட நஷ்டங்களையும் இழப்புகளை யும் ஈடுசெய்யும் வகையில் இக்காலம் செல்வச் சேமிப்பு உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாதகாலம் சனி பகவான் கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலம் உங்களுக்கு நற்காலம். பொற்காலம்தான்! மனதில் நீண்ட காலமாகத் திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிக்கலாம். பிள்ளைகளின் வாழ்வு வளம் பெறும் திட்டங்களையும் நிறைவேற்றலாம். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், வாரிசு யோகம் போன்ற சுபப் பலன்களும் சுமூகமாக நிறைவேறும். உங்களுடைய தொழில், வேலையிலும் முன்னேற்றமும் லாபமும் அனுகூலமும் உண்டாகும். பல வழிகளிலும் வருமானம் பெருகும். அரிய பெரிய சாதனைகளை அசாத்திய துணிச்சலோடு சாதிக்கலாம். குரு இக்காலம்- மேஷம், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலமும் உங்களுக்கு கோட்சார அனுகூலமாக அமையும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி திருமணம், புத்திர பாக்கியம், தொழில் யோகம், வேலைவாய்ப்பு ஆகிய பலன்களைச் செய்யும். கூடவே கடனையும் கொடுக்கும். ஆனால் அந்தக் கடன் சுபக் கடன் எனலாம்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப்பெயர்ச்சி ஏற்கனவே தன யோகம், பதவி யோகம், செல்வாக்கு, அந்தஸ்து, வீடுமனை பாக்கியம், வாகன யோகம் போன்ற நன்மைகளைச் செய்திருந்ததால் இனி சிக்கலைக் கொடுக்கும். இறக்கத்தை ஏற்படுத்தும். விபத்து, வைத்தியச் செலவு, கண்டம் போன்ற துர்ப்பலனையும் தரலாம். கடந்த காலத்தில் ஏழரைச்சனியில் சோதனை களையும் வேதனைகளையும் அனுபவித்தவர்களுக்கு இனி சாதனைகள் புரியும் யோகம் அமையும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப்பெயர்ச்சி பாடுபட்ட பலனை அனுபவிக்கும் யோகத்தைத் தரும். விட்டுப்போன- விலகிப்போன சொந்தம், சுற்றம், நண்பர்களை ஒன்றுசேர்க்கும். நீண்டகாலக் கனவுத் திட்டங்கள் நிறைவேறும். திருமணம், வாரிசு யோகம் உருவாக்கும்.

பரிகாரம்

திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, ஈர உடைகளைக் கழற்றியெறிந்துவிட்டு புத்தாடை உடுத்தி, தர்பாரண்யேஸ்வர சுவாமியையும் சனீஸ்வரரையும் வழிபட்டு, ஊனமுற்றவர்களுக்குத் தான தருமம் வழங்க வேண்டும். ஏழரைச் சனியோ கண்டச்சனியோ ஆரம்பிக்கும்போது குச்சனூர் போகவேண்டும். சனி விலகியபிறகு திருநள்ளாறு போக வேண்டும்.

No comments:

Post a Comment