Oct 12, 2010

சிம்ம ராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி

சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நடப்பீர்கள். மற்றவர்களை அடக்கியாள ஆசைப்படு வீர்கள். உங்கள் விருப்பப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவீர்கள். பசி நேரத்தில் சூடாகவும், காரம் அதிகமாகவும் உள்ள உணவை விரும்பி உண்பீர்கள். மற்ற நேரங்களில் நொறுக்குத் தீனிகள் எதுவும் சாப்பிட மாட்டீர்கள். மாமிசம் உண்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குளிர்ந்த நீரில் நீராடுதல், ஓடை, ஆறு, நீர்வீழ்ச்சிகளில் நீந்திக் குளிப்பதற்கு மிகவும் ஆசைப்படுவீர்கள். இயற்கையாக, அமைதியாக வாழ்வதற்கு விரும்புவீர்கள். அகங்காரம் கொள்வதும் தற்பெருமை பேசுவதும் சிலசமயம் உண்டு! மற்றவர்களின் அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் பணிந்து போக மாட்டீர்கள். உண்மை, சத்தியம், நேர்மை இவற்றிற்குக் கட்டுப்பட்டு நடப்பீர் கள். பெரும் படையே திரண்டு வந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். அதுபோல வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சந்தித்துப் போராடி வெற்றி அடைவீர்கள்.

தைரியம், துணிச்சல் கொண்டிருப்பீர்கள். தர்க்க வாதம் செய்வதில் கெட்டிக்காரராக இருப்பீர்கள். உங்கள் வார்த்தையில் கம்பீரம் இருக்கும். மற்றவர் களை எளிதில் வசீகரிப்பீர்கள்! நகைச்சுவையுடன் உரையாடுவீர்கள். கவிதைகள்கூட எழுதுவீர்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. பொதுஅறிவை பல புத்தகங்களைப் படித்தும் கேட்டும் விருத்தி செய்து கொள்வீர்கள். உயர்கல்வி யோகம் இல்லையென்றாலும் பல கலைகளையும் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பீர்கள். உங்களுக்கு புத்திர தோஷம் இருப்பதால், குறைந்த எண்ணிக்கை யிலே குழந்தைகள் பிறக்கும். சகல லட்சணங்களும் பொருந்திய அழகிய குழந்தைகளைப் பெறுவீர்கள். மகனை புகழ் பெற வளர்ப்பீர்கள். தர்ம காரியங்கள் பல செய்வீர்கள். மெய்ஞ்ஞான கருத்துகளையும், தத்துவ ஆராய்ச்சிகளையும் செய்வீர்கள். வெளியூர் பயணம், கோவில், குளங்கள் சுற்றுதல், யாத்திரை செல்லுதல் போன்றவற்றில் அதிக ஆசை கொண்டிருப்பீர்கள். தெய்வ பக்தியும் குரு சிந்தனையும் எப்போதும் மனதில் குடிகொண்டிருக்கும். சிறு வயதிலேயே தகப்பனார் ஆதரவு குறையும். உடல் நலனில் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வீர்கள். கோர்ட், வம்பு, வழக்கு ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே வரும். கடன் பிரச்சினைகள் இருந்தாலும் கூட்டுத் தொழில் லாபமும் நன்மையும் கொடுக்கும்.

இனி ஸ்ரீ சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடத்திற்கு வருகிறார். இது பாதச்சனி என பொருள்படும். இதனால் மிகப்பெரிய நன்மை என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளும் சச்சரவு களும் உண்டாகும் காலம். பிரச்சினைகள் பெரிய அளவில் போகாமல் பேசித் தீர்க்கக்கூடிய அளவுக்குத்தான் இருக்கும். உடல் நலம் தேறும். திடீர் திடீரென பிரச்சினைகள் தோன்றி மறையும். உங்களது பேச்சு ஒருநாள் போல் மற்றொரு நாள் இருக்காது. எப்பொழுதும் சதா ஏதோ ஒரு பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களால் அவ்வப்போது உதவி கிடைத்து மனதிற்குத் தெம்பளிக்கும். எங்கும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடக் கூடாது. மற்றவர்களுடைய பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தொழிலில் புதிய முறைகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் பேசுவீர்கள். தந்தையால் பின்வயதில் அனுகூலமும் பூர்வீகச் சொத்துக்களும் கிடைக்கும். கடன் வாங்கிய இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைத்து விடுவீர்கள். அரசால் முதலில் பிரச்சினைகள் உண்டானா லும் பிறகு அவை நிவர்த்தியாகி நற்பலன் உண்டாகும். கெட்ட எண்ணத்துடன் உங்களுடன் பழகும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். வண்டி வாகனம் இருந்தால் அதைப் பிறருக்கு விற்றுவிட்டுப் புதிய வாகனம் அல்லது பெரிய வாகனத்தை வாங்க வாய்ப்புண்டு. இது இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனமாகக்கூட இருக்கலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமூகமான உறவு இருந்துவரும். தந்தையின் உடல்நிலை ஒருநாள் இருப்பதுபோல் மறுநாள் இருக்காது. திடீர் திடீரென உடல்நிலை பாதிக்கும். நரம்பு சம்பந்தமான கோளாறுகள். குழந்தைகளின் உடல்நிலையை சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் சிறு குழந்தை எனில் ஜுரம், சளி பிடித்தல், வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்குப் பதவியில் உயர்வும் கனிசமான உபரி வருமானமும் கிடைக் கும். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். இல்லையெனில் உங்களைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்ப வாய்ப்புள்ளது.

வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே தேவை யில்லாத விஷயங்களால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் குடும்பத்திற்கு நல்லது. தடையாகி வந்த திருமணப் பேச்சு தற்போது தடையின்றி சிறப்பாக நடக்கும். சொந்தங்களிடையே இருந்து வந்த தகராறுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உருவாகும். வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஆகியவை இருந்தால் பெரியோர்களின் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்ள லாம். உங்களுக்கு கண், கை இவற்றில் வலி வந்து நீங்கும். உங்களுடைய பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது நல்லது. இல்லையெனில் திருடு போகும் வாய்ப்பு உள்ளது.

தாயார் நலமாக இருப்பார். தொலைவில் உள்ள தெய்வீக ஆலயங் களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் எங்கு பேசினா லும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது நல்லது. ஏனெனில் நீங்கள் நல்லதே சொன்னாலும் உங்களுக்கு வீண் பிரச்சினைதான் வரும். ஏழரைச்சனி முடியும் தறுவாயில் நன்மைகளையும் யோகங்களையும் சனி பகவான் கொடுத்துவிட்டுச் செல்வார் என எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு நன்மைகளை ஸ்ரீ சனி பகவான் வழங்குவார். ஸ்ரீ சனி பகவான் மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் பலவீனம் அடையும். எந்த வேலையையும் உடனடியாகச் செய்ய முடியாமல் இழுபறியாகத்தான் இருக்கும். வயிறு சம்பந்தமான கோளாறுகள் உண்டாகும். கல்வியில் சிறிது தடை வந்தாலும் முயற்சி செய்து படித்தால் கல்வியில் மேன்மை நிலையை அடையலாம். நிலையான சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தை வழி சொந்தக் காரர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வதைவிட உபத்திரவம்தான் அதிகமாகச் செய்வார்கள். தந்தை வழி பாட்டனார் சொத்துக்கள் பாகப்பிரிவினை உண்டாக வாய்ப்புண்டு. அதில் உங்களுக்குப் பெருத்த லாபம் உண்டாகும் என்று சொல்ல முடியாது. ஓரளவு சுமாரான பலனே இருக்கும். மூத்த சகோதரர்களால் மன வருத்தமே உண்டாகும். ஸ்ரீ சனி பகவான் ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

சிம்ம ராசிநாதன் சூரியனின் சாரத்தில் உத்திரத்தில் 26-9-2009 முதல் பத்து மாத காலம் சனி பகவான் சஞ்சரிப்பார். சூரியனும் சனியும் இயற்கையில் பகை பெற்றவர் என்றாலும், சூரியன் ராசிநாதன் என்ற பெருமைக்கு உரியவர் என்பதால் தற்காலிக நட்புக் கிரகமாக மாறி நன்மைகளையே தரும்! செல்வாக்கு, கீர்த்தி, புகழ், திறமை, பெருமை ஆகிய நற்பலன்கள் பெருகும். எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு கச்சிதமாகச் செய்து வெற்றி காணலாம். திருஷ்டியும் பொறாமையும் குறுக்கீடுகளும் தோன்றினாலும் அவற்றை சாதுரிய மாகவும் சாமர்த்தியமாகவும் ஜெயித்து முன்னேறலாம். கவியரசர் கண்ணதாசன் பாடிய மாதிரி, "போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதென எனதுள்ளம் எடுத்துரைக்கு மானால் அக்கருத்தைச் சாற்றுவேன். எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்' என்று துணிவோடு செயல்படுவீர்கள்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாத காலம் சிம்ம ராசிக்கு 12-க்குடைய சந்திரன் சாரத்தில் அஸ்த நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிப்பார். சந்திரன் விரயாதிபதி என்பதால் இதில் பெரும் பகுதி விரயம் ஏற்படும். செலவுகள் உண்டாகும். ஜாதக தசா புக்திகள் யோகமாக இருந்தால் சுப விரயங்களாக அமையும். அது பாகதமாக இருந்தால் வீண்விரயச் செலவுகளாக ஏமாற்றம், இழப்பு போன்றதாக அமையும். அப்படி எதிர்மறைப் பலனாக இருந்தால் திங்கள் கிழமை தோறும் சிவலிங்கத் துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும். மலையென வரும் துன்பம் பனியென விலகிப் போகும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார். அது செவ்வாயின் நட்சத்திரம். சிம்மராசிக்கு செவ்வாய் 4, 9-க்குடையவர். எனவே இக்காலம் உங்களுக்கு அனுகூல மான காலமாகவே அமையும். பூமி, வீடு, வாகனம் போன்ற யோகங் களையும் தெய்வ அனுகூலம், குருவருள், திருவருள், ஆலய தரிசனம், பெரியோர்கள், மகான்கள் சந்திப்பு போன்ற சுபப் பலன்களையும் அடைவீர்கள். குலதெய்வ வழிபாடும் தெய்வத் திருப்பணிகளில் பங்குபெறும் யோகமும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்து விவகாரங் களில் உங்களுக்கு அனுகூலமும் ஆதாயமும் வெற்றியும் உண்டாகும்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி இதுவரை அனுபவித்த விரயம் ஏமாற்றம் இழப்புகளையெல்லாம் அகற்றிவிட்டு, புதுப் பொலிவையும் பூரிப்பை யும் செல்வாக்கு, பெருமை, புகழ், பட்டம், பதவிகளையும் தரும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி ஏமாற்றம் இழப்பு விரயம் ஏற்படுத்தும். குடும்பத்தில் பிரிவு, பிளவைத் தரும். பொன், பொருள், காசு, பணம் போன்றவற்றில் நிறைவைத் தந்து - குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தி மன அமைதியைக் கெடுக்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி காரிய வெற்றி, அனுகூலம், ஆதரவு, நண்பர்கள் ஆதரவு போன்ற நற்பலன்களையும் தரும். நம்பிக்கை மோசடி, ஏமாற்றம், இழப்பு, வீண் விரயம் போன்ற துர்ப்பலன் களையும் தரும். நல்லது- கெட்டது, வெற்றி- தோல்வி இரண்டையும் செய்யும்.

பரிகாரம்

திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் என்ற ஊரில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயர் சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும்.

No comments:

Post a Comment