Oct 12, 2010

மீன ராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி

மீன ராசியில் பிறந்த நீங்கள் திடமான நம்பிக்கை யுடனும் நன்னெறியுடனும் தன்னடக்கத்துடனும் சிறந்து விளங்குவீர்கள். பொறுப்புகள் வரும்போது சாமர்த்தியமாக நழுவிக் கொள்வீர்கள். பிறரை நன்கு புரிந்து கொள்வீர்கள். மற்றவர் ஏதேனும் தீங்கு செய்தால் அவர்களிடம் கூறாமல் பிறரிடம் சொல்லி கேலியும் கிண்டலும் செய்வீர்கள். சிரித்துப் பேசி மற்றவர்களை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள். நயமாகவும் அபிநயத்துடன் முகத்தில் பாவனை காட்டியும் பேசுவீர்கள். குடும்பத்தில் பெரும்பாலும் கடைக்குட்டியாக இருப்பீர்கள். அல்லது மற்றவருக்குச் செல்லப் பிள்ளையாக இருப்பீர்கள். சகோதரிகள்மேல் பாசம் கொண்டிருந்தாலும் விலகியே வாழ்வீர்கள். தாயாரின் அன்பும் அரவணைப்பும் பெரிய வயதுவரை உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும். எவ்வகையிலும் வசதி குறையாமல் சுக ஜீவனம் செய்வீர்கள்.

கல்வியில் உயர்படிப்பு பயிலும் வேளையில் தடை ஏற்பட்டு பின்னர் தொடர்ந்து பயிலுவீர்கள். நீங்கள் பிறந்தது ஓரிடம், வளர்ந்தது ஓரிடம், கல்வி பயின்றது வேறிடம் என இடம் மாறி மாறி வாழ்வீர்கள். கலைப் பயிற்சி, விஞ்ஞான ஆராய்ச்சி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெறுவீர்கள். அறிவு நூல்கள் பலவற்றையும் படித்து அறிவை விருத்தி செய்து கொள்வீர்கள். பெரும்பாலும் உங்களுக்குப் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். ஆண் வாரிசு ஒன்று அல்லது இரண்டு ஏற்பட்டு மனவேதனை அடைவீர்கள். இளைய தாரத்துக்கு ஆண் வாரிசு உண்டாகும். உங் களை எதிர்ப்பவர்களின் தடைகள்தான் உங்கள் முன் னேற்றத்தின் படிக்கட்டுகள் ஆகும். சாதாரணமாகக் கடன் தொல்லை இருக்காது. ஆனால் கடன் இருக்கும். சுயதொழில் நிறுவனம் ஆகியவற்றை விரிவுபடுத்தவும், வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாலும், பெண்மக்கள் திருமணத்திற் காகவும் கடன் வாங்க நேரிடும். ஆனால் ஒரு கடனைக் கட்டினால் மறுகடன் வாங்குவீர்கள். நண்பருக்காக எதையும் செய்யும் குணம் கொண்டிருப்பீர்கள். அதனால் மற்றவரின் பகையையும் பெறுவீர்கள். பாராட்டு பெறமாட்டீர்கள். இருப்பினும் தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் என்று கூறுவீர்கள். நன்றாக நயந்து பேசும் நண்பர்களையெல்லாம் நல்லவர் என நம்பி மோசம் போவீர்கள்.

புது சிந்தனைகளையும் மாறுபட்ட புதுமையான கருத்தையும் சிறந்த தத்துவங்களையும் கூறுவீர்கள். இயற்கையாகவே இளம்வயது முதலே கூர்மையான அறிவினைப் பெற்றிருப்பீர்கள். ஆனால் உங்களுடைய கூச்ச சுபாவத்தால் திறமையை வெளிப்படுத்தத் தயங்குவீர்கள். பிற்காலத்தில் மற்றவர் ஆச்சரியம்படும்படியான செயல்களைச் செய்து காட்டுவீர்கள். பாதி வயதிற்கு மேல்தான் உங்கள் திறமை வெளிப்படும். இளமைக் காலத்திலேயே, வசதியான குடும்பத்தில் பிறந்த- படித்த- அழகான பெண் மனைவியாக வருவாள்.

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த சனி பகவான் பல நற்பலன்களைக் கொடுத்தார். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் அவை யாவும் படிப்படியாகத் தீர்ந்தது. உங்களிடம் இருந்த வம்பு, வழக்குகள் யாவும் நிவர்த்தி அடைந்தது. உங்களது அவசர பேச்சால் சில பிரச்சினைகளையும் சந்தித்தீர்கள். சிலருக்கு உடல் நலமும் பாதித்தது. செய்தொழிலில் ஓரளவு நற்பலன்களே இருந்தது. எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்கள். சிலருக்குப் புதிய வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அதற்கான அமைப்பு உண்டானது.

இனி சனி பகவான் உங்களது ராசிக்கு ஏழாமிடமான களஸ்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக வருகிறார். குடும்பத்தில் சில பிரச்சினை களும் சிரமங்களும் உண்டாகும். உங்களது பேச்சாலேயே பிரச்சினை கள் உருவாகும். ஆதலால் எங்கு பேசினாலும் நிதானமாகவும் யோசித்தும் பேசுங்கள். விலகியிருந்த நண்பர்கள் இனி நெருங்கி வருவார்கள். கணவன் - மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்தப் பணம் சீக்கிரம் வந்து சேராது. ஆதலால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதே போல் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதோ, பொறுப்பு எடுத்துக் கொள்வதோ கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் யாவும் உங்களையே வந்துசேரும்.

நீங்கள் செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலை உண்டாகும். அல்லது விமர்சனத்திற்கு ஆளாகலாம். எப்படி இருந்தாலும் உங்களது கௌரவம் மட்டும் பாதிக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். வம்பு, வழக்கு வந்து பின் குற்றமற்றவர் என நிரூபணமாகும். உங்களது உடல் நிலையிலும் கவனம் தேவை. மனதில் இனம்புரியாத பயம் இருந்தாலும் பிற்பகுதியில் தெளிவு பிறக்கும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள்.

வேலையில் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். உங்களது தன்னம்பிக்கையால் அனைவரிடமும் நற்பெயர் வாங்குவீர்கள். வீட்டு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவு களும் வீண் விரயங்களும் உண்டாகும். சிலருக்கு வீட்டில் சில மாறுதல் கள் செய்யும் சூழ்நிலையும் உண்டாகும். இளைய சகோதரர்களால் நன்மையும் உதவியும் எதிர்பார்க்க முடியாது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்தான் சிற்சில உதவிகள் இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலில் தொய்வு நிலையும் உண்டாகும். இருப்பினும் ஓரளவு பணவரவு இருக்கும். தாய்வழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வோ இடமாற்றமோ கிடைப்பது கடினம். வேலை இல்லாதவர்களுக்குக்கூட மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஓரளவு பணம் கிடைக்கும்.

பண விஷயத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் தாங்களே முடிவெடுத்துச் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதில் தடையும் தாமதமும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். இருப்பினும் அதிலும் சில சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டு, பிறகு இனிதே திருமணம் நடைபெறும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.

தந்தைக்குப் பல வழிகளில் பணம் வரும். இருப்பினும் உடல் நிலையில் சிறிது பாதிப்புகளைக் கொடுக்கும். வீடு, வண்டி, வாகனம் ஆகியவற்றில் பழுது பார்ப்பு செலவுகள் உண்டாகும். ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புண்டு. உறவினர்களால் தொல்லையும் பகையும் உண்டாகும். உங்களுக்கெதிராகச் செயல்படுவார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள்.

சிலருக்கு நிலையான தொழிலும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் வரும். மாணவர்கள் சுமாரான பலனை அடைவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. கடனை அடைப்பதற்கே சரியாக இருக்கும். மூத்த சகோதரர்களுக்குப் பதவியில் இடமாற்றமும், அதிக அலைச்சலும் ஏற்படும். சிலருக்கு உயர் பதவியுடன் கூடிய இடமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. அலைச்சலினால் உடல்நிலை பாதிக்கும்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஒன்பதாமிட மான பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு தோன்றும். தந்தைக்கு எடுத்த காரியம் முடிவடையாமல் இழுபறி நிலையாகவே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஒரு பிடிப்போ பற்றோ இல்லாமல் செயல்படுவார். பிதுரார்ஜித சொத்து வகையில் வில்லங்கமும் பிரச்சினைகளும் தோன்றும்.

குழந்தைப் பிறப்பில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்குச் செல்ல முயற்சிப்போருக்கு காலதாமதம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மிகமிக அவசியம். குல தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.

சனி பகவான் 7- ஆம் பார்வையாக ஜென்மராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்பு பயந்து- நம்பிக்கையிழந்து இருந்த சூழ்நிலை மாறி, தற்போது அதிக நம்பிக்கை யுடனும் அதிக வீரியத்துடனும் எச்செயலிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மன பயம் விலகும். எங்கு சென்றாலும் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். பல கௌரவமான பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருக்கு அடிக்கடி உஷ்ண சம்பந்தமான நோய்களும் நரம்பு சம்பந்தமான நோய்களும் உண்டாக வாய்ப்புண்டு. சிலர் கடன் வாங்கி, பழைய வாகனத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2009 - செப்டம்பர் முதல் பத்து மாத காலம் மீன ராசிக்கு 6-க் குடைய சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிப்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும். மறைமுக எதிர்ப்புகளும் தவிர்க்கமுடியாத கடன்களும் டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்களும் உருவாகும். "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்' என்பதுபோல சிகிச்சையும் தேவை; தெய்வ வழிபாடும் தேவை.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010 - ஜூலை முதல் 14 மாத காலம் மீன ராசிக்கு 5-க்குடைய சந்திரனின் சாரத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்கள் மனம்போல் வாழ்வு அமையும். மனதில் வகுத்த நற்திட்டங்கள் நிறைவேறும். மனைவி, மக்களால் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படும். சொந்த பந்தங் களிடையே பகை உணர்வு நீங்கி பாச உணர்வு மேலிடும். பொருளா தாரத்தில் திருப்தியான நிலை ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011 - செப்டம்பர் முதல் ஆறு மாதம் மீன ராசிக்கு 2, 9-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சரிப்பார். இக்காலம் பொற்காலம்; நற்காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஏராளமான தனவரவு, தாராளமான சுபச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்குத் திருமணம், வாரிசு யோகம், பதவி யோகம் ஆகிய நற்பலன்கள் யாவும் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி பெண்கள் வகையில் ஏற்பட்ட சஞ்சலங் களையும் சங்கடங்களையும் விலக்கி நன்மையும் நன்மதிப்பும் உண்டாக்கும். தொழில் உயர்வு, தனவரவு, லாபம், சேமிப்பு, கடன் நிவர்த்தி, காரிய வெற்றி போன்றவை ஏற்படும். தேக சௌக்கியம் தெளிவாக இருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி உடல் நலத்திலும் மன நலத்திலும் வேதனை களை விலக்கி நன்மைகளையும் ஆதாய அனுகூலங்களையும் உருவாக்கும். பணவரவு, தொழில் லாபம், கடன் நிவர்த்தி, வழக்குகளில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள் வகையில் நல்லவை போன்ற நற்பலன்கள் நடக்கும். பேரும் புகழும் பெருமையும் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி இதுவரை பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்வதுபோல் லாபமும் முன்னேற்றமும் வெற்றியும் தரப்போகிறது. தொழில்துறையில் வேகத்தையும் யோகத்தையும் தந்து சோகத்தைப் போக்குவது உறுதி.

பரிகாரம்

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். அவருக்கு நல்லெண்ணெய் திரிவிளக்குப் போட்டு வழிபடவும்.

No comments:

Post a Comment