Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -கும்பம்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
+ உடன்பிறந்தவர்களால் நன்மை
- பணவரவில் மந்தம்
தியாக மனோபாவத்துடன் செயல்படும் கும்பராசி அன்பர்களே!
குருபகவான் மகர ராசியிலிருந்து பெயர்ச்சியாகி உங்களின் ராசியாகிய கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர, சப்தம, பிதா பாக்ய ஸ்தானங்களை பார்க்கிறார். ஜென்ம குரு என்கிற இந்த நிலை உங்கள் வாழ்வில் சில அசவுகரியங்களை ஏற்படுத்தும். ஏற்கனவே அஷ்டமச் சனியின் பிடியிலும் சிக்கியிருக்கிறீர்கள். இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற இடங்களின் வழியாக ஓரளவு பலன் பெறுவீர்கள். மனதில் குழப்பமும், செயலில் மந்தநிலையும் இருக்கும். உங்கள் குடும்பநலனில் அக்கறை உள்ள உறவினர், நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவியுடன் செயல்களை சீரமைத்துக் கொள்ளலாம். மற்றவர்களை நம்பக்கூடாது. எவ்வளவு பாடுபட்டாலும் பணவரவு மந்தமாகவே இருக்கும். உடன்பிறந்தவர்கள் வளர்ச்சி பெற்று உங்களுக்கும் உதவுவர்.
வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான வளர்ச்சி இராது. இதுவரை சேஷ்டை செய்த புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும். அவர்களுக்கு ஆன்மிக அறிவைப் புகட்ட இது உகந்த நேரம். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர வழி பிறக்கும். அவர்களது படிப்பு நன்றாக இருக்கும். பூர்வ சொத்தில் வருமானம் ஓரளவு அதிகரிக்கும். எதிரிகளிடம் இருந்து விலகிப்போவதால் பலவிதத்திலும் நன்மை பெறலாம். உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. கணவன், மனைவி குருபகவானின் நல்லருள் பெற்று ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். அறிவும், உதவும் மனப்பான்மையும் கொண்ட புதியவர்களின் நட்பைப் பெறுவீர்கள். ஆபத்தான இடங்களுக்குச் செல்லக்கூடாது. மின்சாரத்தைக் கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டி வரும். வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு குறைந்த அனுகூலமே உண்டு.
தொழில்: தொழில் சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாத்தாலே போதுமென்ற நிலையே இருக்கிறது. ரியல் எஸ்டேட், மருத்துவமனை, திருமண மண்டபம், ஓட்டல், லாட்ஜ், நிதிநிறுவனம் நடத்துவோர், வாகனம், டெக்ஸ்டைல்ஸ், தோல், காகிதம், பிளாஸ்டிக், குளிர்பானம், இரும்பு சார்ந்த தொழில் செய்வோர் சில மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலமே ஓரளவு லாபம் பெறலாம். மற்ற தொழில் செய்வோருக்கும் குறைந்த லாபமே கிடைக்கும். நண்பர்கள் தொழில்நுட்ப உதவிகளை மனமுவந்து உதவுவர்.
வேலை: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்கள் மிகக் கவனமாக செயல்படாவிட்டால் ஏதாவது குளறுபடி ஏற்பட்டு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு மனதுடன் நடந்து கொள்வர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். பணியிடங்களில் நடக்கும் விவாதங்களில் கருத்து சொல்வதை தவிர்ப்பதால் நற்பலன் ஏற்படும்.
வியாபாரம்: விவசாய விளைபொருட்கள், உணவு பண்டங்கள், கட்டுமானப் பொருள், நகை, ஜவுளி, பலசரக்கு, விவசாய இடுபொருட்கள், உழவுக்கருவிகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிபாகங்கள், பாத்திரம், இறைச்சி, மருந்து, மருத்துவ உபகரணம், எண்ணெய் வித்து, காலணி, அடுப்பு விற்பவர்கள் கடுமையாக முயற்சித்தால் தான் குறைந்த லாபத்தை எதிர்பார்க்கலாம். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். சிலருக்கு இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை போன்ற பலன்கள் நிகழலாம். குடும்பப் பெண்கள் செலவுக்கு திண்டாடினாலும், கணவரின் ஆதரவு காரணமாக நிம்மதியான மனநிலையைப் பெறுவர். புத்திரர், கணவர், தந்தை ஸ்தான பலன்கள் உங்களுக்கு மிகுந்த பயன்களைத் தரும் என்பதால் பிரச்னைகள் குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு சுமாரான லாபமே கிடைக்கும்.
படிப்பு: மருத்துவம், விவசாயம், ரசாயனம், பவுதிகம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜனியரிங், சட்டம், ஜர்னலிசம், கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு படிப்பு சுமாராகவே இருக்கும். மற்றவர்களும் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்கும் நிலை ஏற்படும். படிப்புக்கான செலவுக்கும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகளுக்கு அனைத்து செயல்பாடுகளிலும் தடை ஏற்பட்டு மனக்கஷ்டத்தை உருவாக்கும். ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பர். பணம் பெற்ற சிலர் கூட கவிழ்த்து விட வாய்ப்புண்டு. எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
விவசாயம்: விவசாயிகள் அளவான மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும், சுமாரான பணவரவு தான் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் இழுத்தடிக்கும் நிலை இருக்கிறது.
வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை
பரிகாரப் பாடல்
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை
ஒளிமதி செஞ்சடையாளை
வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கும் நுண்ணூல் இடையாளை
எங்கள் பெம்மான் இடையாளை
இங்கு என்னை இனி படையாளை
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

No comments:

Post a Comment