Mar 23, 2010

குருபெயர்ச்சி பலன்கள் -விருச்சிகம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 15, இரவு 11.32 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2010 டிசம்பர் 3 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


விசாகம் 4, அனுஷம், கேட்டை
+தொழிலில் வளர்ச்சி
- உறவினர்களுடன் பிரச்னை
நேர்மையான செயல்பாடு நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு நான்காம் இடமான கும்பத்தில் அமர்வு பெறுகிறார். தனது 5,7,9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 8,10,12 ம் இடங்களை பார்க்கிறார். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில சிரமமான பலன்களைத் தரஉள்ளது. இருப்பினும் குருவின் பார்வை பெறுகிற ஸ்தானங்களில் இருந்து தேவையான ஓரளவு பலன் பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை குறைய வாய்ப்புண்டு. மனதிடத்தை வளர்க்கும் பயிற்சியை மேற்கொண்டால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம். பேச்சால் குடும்பத்திலும், வெளியிடங்களிலும் பிரச்னை வரும். இளைய சகோதரர்களுடன் தேவையான விஷயங்களில் கலந்தாலோசனை செய்து கொண்டால் பரஸ்பரம் ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் புதிதாக பராமரிப்பு செய்ய முயற்சிக்க வேண்டாம். தாய்வழி உறவினர்கள் எதையாவது எதிர்பார்த்து வருவார்கள். எதிரிகள் உங்களது கவனக்குறைவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடுவர். உடல் நலம் தொடர்பான சில பிரச்னைகளும் மருத்துவச்செலவை உயர்த்தும். வழக்கு விவகாரங்களில் சமரசமாக சென்று விடுவது தேவையற்ற பிரச்னைகளைக் குறைக்கும்.இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பணவரவில் பாதிப்பு இராது. புத்திரர்களும், பெற்றோரின் உணர்வுகளை புரிந்து நடந்து தம்மால் ஆன உதவிபுரிவர். கணவன், மனைவி குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவர். ஆனால், நண்பர்களிடம் அபிப்ராய பேதம் உருவாகும்.
தொழில்: குருவின் பார்வையால் தொழில் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். வாகனம், தீப்பெட்டி, பட்டாசு, இரும்பு, காகிதம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மின்சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள், கல்குவாரி, மரஅறுவை மில், ரியல் எஸ்டேட் தொழில், மலைத்தோட்டபயிர் உற்பத்தி செய்பவர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவர். தொழில் அபிவிருத்தியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே சமயம் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். கிட்டங்களிகளில் கடும் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துங்கள். பொருட்களுக்கு சேதம் வரலாம்.
வேலை: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் குறுக்கிடும் தடைகளை உறுதியான மனதுடன் கடந்திடுவர். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சலுகைகள் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். திடீரென இடமாற்றம் வந்து பிரச்னைகளை உருவாக்கும். வியாபாரம்: நகை, ஜவுளி, பலசரக்கு, தானியங்கள், மருந்து, மருத்துவ உபகரணம், இறைச்சி, பயிர் வகைகள், காய், கனி, பூ, பர்னிச்சர், விவசாய இடுபொருட்கள், மின்சார உபகரணங்கள், பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் புதிய வாடிக்கையாளர்களின் வரவால் லாபத்திற்கு குறைவிருக்காது. சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. நிர்வாகத்திடம் கேட்ட சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு ஓரளவே பணம் கிடைப்பதால், சில தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவர். தாய் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் நடத்தும் பெண்களுக்கு அதிக பிரச்னையில்லை. தொழில் ஓரளவு நன்றாகவே நடக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு.
படிப்பு: விவசாயம், மருத்துவம், ஓவியம், சினிமாதொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், பயோகெமிஸ்ட்ரி துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் மிக நன்றாகப் படிப்பர். மற்ற துறைகளில் படிப்பவர்களுக்கும் படிப்பில் பாதிப்பு இராது. ஆசிரியர், பெற்றோர், உறவினர்களிடம் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். இறுதி ஆண்டை முடிப்பவர்களுக்கு குருவருளால் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
அரசியல்: அரசியல்வாதிகளுக்கு சொந்த வேலை அதிகரிக்கும். இதனால் ஆதரவாளர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். எதிரிகளிடம் மோதல் போக்கால் மனம் சஞ்சலப்படும். பணவரவு திருப்திகரமாகும். வெளியூர் பயணம் இனிய
அனுபவங்களை பெற்றுத்தரும்.
விவசாயம்: விவசாயிகள் சுமாரான மகசூல் பெறுவர். கால்நடைகளால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. புதியநிலம் வாங்கும் முயற்சியில் பத்திரங்கள் தொடர்பான பிரச்னை வரலாம். கவனமாக வாங்கவும். நிலம் தொடர்பான சட்ட பிரச்னைகளும் இழுத்தடிக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரப் பாடல்
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
யாவரும் துதிக்க நின்ற
ஈரறு தோள் போற்றி அன்னாள்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கை வேல் போற்றி! போற்றி!!

No comments:

Post a Comment