Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-சிம்மம்
மகம், பூரம், உத்திரம் - 1
தம்பதி ஒற்றுமை; - பணம் கரையும்


துணிவோடு செயலாற்றி, சோதனைகளை சாதனையாக்கும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 2ல் சனி, 5ல் ராகு, 11ல் கேது என்கிற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு எட்டாமிடமான மீனத்தில் மாறுபட்ட குணத்துடன் பிரவேசிக்கிறார். கேதுபகவானின் பரிபூரண அருள் மட்டும் ஆண்டு முழுவதும் உறுதுணையாக இருந்து உங்களுக்கு கைகொடுக்கும்.
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் எதிர்கால நலனுக்கு நல்லது. கண்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாற்றுபவர்களுக்கு இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இளைய சகோதரர்கள் வகையில் சிறு அளவிலான கருத்துவேறுபாடு உண்டாகி மறையும். வீடு, வாகனங்களில் மராமத்து பணி மேற்கொண்டால் கடன்பட நேரிடும். இருக்கும் நிலையையே தக்கவைத்துக்கொள்வது
போதுமானது. தாயின் தேவை அறிந்து உதவி அவருடைய ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புத்திரர்களின் நிலை சிலருக்கு மனக்கவலையை உண்டாக்கும். தக்க அறிவுரைகளை கூறி அவர்களுக்கு வழிகாட்டுவது நன்மையைத்தரும். எக்காரணம் கொண்டும் சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. இஷ்ட, குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதால் சிரமங்கள் விலகி மனஅமைதி ஏற்படும். உடல்நலம் சுமாராகவே இருக்கும்.உடல் ஆரோக்கியத்தை அக்கறையோடு பாதுகாப்பது நல்லது. சத்துள்ள உணவு உண்பது உடல்நலத்தை மேம்படுத்தும்.
தம்பதியர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். நண்பர்களின் ஆதரவு கைகொடுக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர். பணவரவு மிகச் சுமாராகவே இருக்கும். செலவுகள் எகிறும் என்பதால் சேமித்த பணத்தில் கைவைக்க வேண்டிய நிலை வரலாம். சிலருக்கு கடன் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகும். இந்த காலகட்டத்தில் பொறுமையும், சிக்கனமும், ஆடம்பரத்தைத் தவிர்த்தலுமே பணப் பிரச்னையை சீராக்க உதவும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு கடுமையான முயற்சி தேவைப்படும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் பொருட்கள், டெக்ஸ்டைல், பீங்கான், பிளாஸ்டிக், பால் பொருட்கள், இசைக்கருவி, அழகு சாதனப் பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, சோப்பு, இரும்பு, காகிதம், தோல் தொழில் சார்ந்தவர்கள் நிர்வாகத்திலும் பொருட்களின் தர உற்பத்தியிலும் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். லாபம் அதிகமிருக்க வாய்ப்பில்லை. மற்ற தொழில் செய்வோரும் சுமாரான லாபமே பெறுவர். குரு அதிசார பெயர்ச்சி காலத்தில் தாராள உற்பத்தியும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் கிளைகள் துவங்கும் வாய்ப்பு உருவாகும். நவீன யுக்திகைள கையாண்டு அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளர்ச்சிப் பணிக்காக தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறுதல் நல்லதல்ல.
வியாபாரிகள்: ஸ்டேஷனரி, அழகு சாதனம், கட்டுமான பொருட்கள், நகை, ஜவுளி, பலசரக்கு, எண்ணெய், தென்னை, பனை பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, விளையாட்டு சாதனங்கள், காகித வியாபாரிகள் சந்தையில் உண்டாகும் கூடுதல் போட்டியை எதிர்கொள்ள நேரிடும். மற்றவர்களும் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கடன் பணம் வசூலாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவர். எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்கு மிகுந்த பொறுமை தேவைப்படும். அதிகாரிகளுடன் அவ்வப்போது கருத்துமோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையற்ற சிக்கலை உருவாக்கும். பொறுமையை கடைபிடிப்பது எதிர் கால நலனுக்கு உகந்தது. சிலருக்கு நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையும், வேண்டாத பணியிட மாற்றமும் ஏற்படலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் வேண்டாத குளறுபடிகளை சந்திப்பர். அக்கறையுடனும், கவனத்துடனும் பணிபுரிவதால் பிரச்னையிலிருந்து தப்பலாம். குடும்ப பெண்கள் கணவரின் பண வருமானத்திற்கேற்ப சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு நற்பெயர் பெறுவர். சீரான ஓய்வு மிக அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்தோடு கடுமையாக உழைத்தால் மட்டுமே முன்னேற்றம் பெறமுடியும். இரவல் நகை கொடுப்பது, வாங்குவது கூடாது. நகை பாதுகாப்பில் உரிய கவனம் தேவை.
மாணவர்கள்: மருத்துவம், ஓட்டல் மேனேஜ் மென்ட், மார்க்கெட்டிங், கேட்டரிங், அனிமேஷன், பாங்கிங், ஆடிட்டிங், மாடலிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மரைன், ஏரோநாட்டிக்கல், சிவில் இன்ஜினியரிங், ரசாயனம், பவுதிகம், இசை,
ஓவியம், நடனம், விவசாயத்துறை மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களுடன் நட்புறவு பலப்படும். படிப்புக்கான பண உதவியும் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் தாராளமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெற கூடுதலான முயற்சி தேவை. எதிரிகளால் சிரமங்கள் உண்டாகும். ஆனால், தக்க பதிலடி கொடுத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளின் தயவைப் பெறுவதில் கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். தர்ம காரியங்களில் பணம் செலவழிக்க நேரிடும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை தரும். சிலருக்கு புத்திரர்களின் கவனக்குறைவான செயலினால் அவப்பெயர் உண்டாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். சாகுபடி செலவுக்கு கடன்வாங்க நேரிடும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டாகும். நில விவகாரங்களில் பிரச்னை உருவாகும். முன்யோசனையுடன் செயல்படுவதுஎதிர்காலத்துக்கு உகந்தது.
வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்
பரிகார பாடல்
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லை போம் போகாத்துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்தில்
வீற்றிருக்கும் கணபதியை கை தொழுதக் கால்.

No comments:

Post a Comment