Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1
ஓரளவு வருமானம், - வேண்டாத பிரச்னை


லட்சியத்தில் உறுதியுடன் செயல்படும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் ராகு, 7ல் கேது, 10ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை மீனத்தில் பிரவேசிக்கிறார்.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் குழப்பமான மனநிலை ஏற்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் உதவி சரியான தருணத்தில் கிடைக்கும். இளைய சகோதரர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் தவிர்க்க இயலாத சில மாற்றங்களை செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். புத்திரர்கள் கவனக்குறைவாக நடந்துகொள்வர். அவர்களிடம் இதமான கண்டிப்பு காட்டுவது அவசியம். பூர்வீக சொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டு.
இஷ்ட, குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவை. ஊட்டம் தரும் உணவு வகைகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவது அவசியம். பணவரவு சுமாராக இருக்கும். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட பொறுமை காக்க வேண்டும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
நண்பர்களிடம் அளவுக்கு அதிகமான பணம் கொடுப்பது, வாங்குவது கூடாது. பிறருக்காக முன்ஜாமீன் போன்ற எந்த பொறுப்பும் ஏற்கக்கூடாது. இதனால் வேண்டாத பிரச்னைகள் உருவாகும். உங்கள் பேச்சில் கடுமை அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசுவது நல்லது. சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வெளிநாடு வேலை வாய்ப்பில் எதிர் பார்த்த வகையில் நல்ல பலன்கள் உண்டாகும். சிலருக்கு வீடு, தொழில் மாற்றம் தவிர்க்க இயலாது.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியும். ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், கட்டுமான பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம், வாகனம், இரும்பு, பிளாஸ்டிக், டெக்ஸ்டைல்ஸ், எண்ணெய் ஆலை அதிபர்கள், கல்வி, நிதி நிறுவனம், அச்சகம், டிராவல் ஏஜென்சி, ரியல் எஸ்டேட், லாட்ஜ், ஓட்டல், ஆஸ்பத்திரி நடத்துவோர் உற்பத்தி மற்றும் தரத்தில் நேரடி கவனம் செலுத்த தவறினால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். லாபம் சுமாராகவே இருக்கும். மற்ற துறையினருக்கும் இதே நிலையே ஏற்படும். தொழில் சார்ந்த தடைகள் குருவின் அதிசார காலத்தில் பெருமளவில் சரியாகும். இக்காலகட்டத்தில் தொழிலில் புதிய நுட்பங்களை மேற்கொண்டு லாபத்தை க்ஷபெருக்குவீர்கள்.
வியாபாரிகள்: நகை, வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், ஸ்டேஷனரி, பலசரக்கு, எண்ணெய் வித்துக்கள், நவீன பர்னிச்சர், ஜவுளி, தோல் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக், இனிப்பு பண்டங்கள், மலர், காய்கனி, வாசனை திரவியம் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாப விகிதத்தைக் குறைத்துக் கொண்டு, இனிய அணுகு முறையை பின்பற்றினால் மட்டுமே வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் கூடுதல் மூலதனத்திற்காக கடன் வாங்க நேரிடும். மிகுந்த கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்களுடன் கனிவுடன் பேசி அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் சிரமம் எதுவும் அணுகாமல் தவிர்க்கலாம். பதவிஉயர்வு, கடன் மற்றும் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிற்சாலை, கல்வி நிறுவனம், மருத்துவம், உணவு பண்டங்கள் தயாரிப்பு சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. நட்புறவிலும் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனத்துடன் பணிபுரிவதால் மட்டுமே பிரச்னையிலிருந்து தப்பலாம். சலுகைகளை பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் கணவரின் விருப்பத்தை அறிந்து செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத சண்டை, சச்சரவு உருவாகும். நகைகளை பாதுகாப்பதில் கவனம் தேவை. இரவல் நகை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. தந்தை வழி உறவினர் உதவி செய்வர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.பொருட்களை எப்போதும் ரொக்கத்திற்கு விற்பனை செய்வதால் நிதிநிலையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
மாணவர்கள்: வணிகவியல், வங்கியியல், ஆடிட்டிங், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மருத்துவம், கேட்டரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இதழியல், சட்டத்துறை மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். மற்ற துறை மாணவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். சக மாணவர்களின் உதவி கல்வி வளர்ச்சிக்கு உதவும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது எதிர்கால நலனுக்கு உகந்தது. படிப்பை முடித்தவர் களுக்கு சற்று சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் நல்ல முறையில் சேவை செய்தாலும் உங்களை குறைசொல்வதற்கென்று சிலர் வருவர்.ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற பணம் அதிகமாக செலவாகும். வழக்கு விவகாரங்கள் தொல்லை கொடுக்கும். எதிரிகளால் பிரச்னைகள் உருவாகி மறையும். புத்திரர்களை அரசியல் பணிக்கு அளவோடு பயன்படுத்துவது நல்லது. குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் நற்பலன் உண்டாகும். அரசியலோடு தொழில் புரிபவர்கள் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.
விவசாயிகள்: விவசாயிகள் அளவான மகசூல் பெறுவர். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சுமூக தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் : முருகன்
பரிகார பாடல்
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
யாவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றிஅன்னாள்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கை வேல் போற்றி! போற்றி!!

No comments:

Post a Comment