Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன் மிதுனம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
(50/100) சிரமம்
அன்புள்ளம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் கேதுவும் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 9, 5ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 3, 11ம் இடத்தில் பதிகிறது. ராகு, கேது உங்கள் ராசிக்கு எதிரான பலன் தரும் இடங்களில் பிரவேசிக்கின்றனர். கூடுதல் பணச்செலவு ஏற்படும். மனதில் ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவதால் மட்டுமே தொழில்வளர்ச்சி முன்னேற்றம் தரும். ஆன்மிகவாதிகளும் ஆன்றோர்களும் உங்களிடம் நட்பு பாராட்டுவர். சமூகப்பணியில் இயன்ற அளவில் ஈடுபடுவீர்கள். இளைய சகோதரர்களின் உதவி முக்கிய சமயத்தில் உறுதுணையாக இருக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைந்த எவருக்கும் இடம் தரக்கூடாது. தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர் விளையாட்டு குணத்துடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. அவர்களின் உடல்நலம் பேணுவதில் அக்கறையுடன் பெற்றோர் செயல்படுவது நல்லது. வழக்கு, விவாதங்களில் அதிக நேரத்தை செலவிடாமல் உழைப்பில் கவனம் கொள்வது அவசியம். தியானம், உடற்பயிற்சி, சீரான ஓய்வு, இயற்கை, இசையை ரசிப்பதுபோன்ற செயல்கள் உங்கள் உடல்நலத்தை ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்றும். தம்பதியர் ஒருவருக்கொருவர் கூடுதல் அன்பு பாராட்டி நடப்பதால் மட்டுமே குடும்பத்தின் சந்தோஷம் வளர்ச்சி பெறும்.
வெளியூர் பயணத்தை பயன்கருதி மேற்கொள்வது மட்டுமே நன்மைபெற
உதவும். தொழில் சார்ந்த வகையில் இருந்த சிரமம் விலகி முன்னேற்றம் காண அதிர்ஷ்டகரமான வாய்ப்பு உருவாகும். தகுந்த முறையில் பயன்படுத்துவதால் சீரான வளர்ச்சி ஏற்படும். அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவுவதில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அளவான வருமானமே கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: கல்விநிதி, தொழிற்பயிற்சி நிறுவனம் நடத்துபவர்கள் தொழிலில் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்படும். இருப்பினும் சக தொழில்முறை சார்ந்த நண்பர்கள் ஒப்பந்த அடிப்படையில் உங்களுக்கு சில உதவிகளை தருவர். டெக்ஸ்டைல், உணவு பண்டம், தோல் பொருட்கள், சமையல் எண்ணெய் உற்பத்தி செய்பவர்கள், தம்மிடம் சரக்கு கொள்முதல் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்குவர். நடைமுறை மாற்றத்தால் உற்பத்தி பெருக்கமும் தொழில் வளர்ச்சியும் காணலாம். சிலர் தொழில் தரம் உயர்த்த புதிய நுட்பங்களை புகுத்துவர். பணியாளர்களுடன் சீரான தொழிலியல் உறவு இருக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகைப் பொருட்கள், பர்னிச்சர், அலங்காரப் பொருட்கள், பாத்திரங்கள், பீங்கான், தோல், ரப்பர் பொருட்கள், காய்கறி, பழ வகைகள், மலர், மருந்து, வாசனை திரவியம், அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வளர்ச்சி தரும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவர். மற்றவர்களுக்கு கடும் உழைப்பின் பேரிலேயே லாபம் எதிர்பார்க்கலாம். டிராவல்ஸ் நடத்துவோருக்கு ஓரளவு லாபம் இருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது பணியில் சில குளறுபடிகளை ஏற்படுத்தும் கிரகநிலை உள்ளது. உரிய பயிற்சி முறையை பின்பற்றுவதால் மட்டுமே பணி சிறக்கும். நிதி நிறுவன பணியாளர்கள் தமது சொந்த பொறுப்பில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நிதியுதவி தரும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. சக பணியாளர்களுடன் இருக்கும் நட்புறவு சீராகும். சிலருக்கு இடமாற்றம், வேலை இழப்பு போன்ற மனதுக்கு ஒவ்வாத பலன் நடக்கும். பணச்செலவில் சிக்கனம் அவசியம்.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் செயல் திறமையை வளர்த்து பணிபுரிவதால் மட்டுமே இலக்கு சரிவர நிறைவேறும். கடன் கிடைக்கிறதே என்று தேவையற்ற செலவினகளுக்காக கடன் பெறக்கூடாது. குடும்ப பெண்கள் அன்றாட நடைமுறை பணிகளுடன் தமது உடல்நலத்திலும் உரிய கவனம் கொள்வது நலம் தரும். கணவரின் பணவருமானத்திற்கேற்ப குடும்ப பணச்செலவில் முக்கிய தேவைகளை மட்டும் நிறைவேற்றவும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் சந்தை வாய்ப்பு பெற இனிய வார்த்தை பேசுவது நல்லது. சுமாரான வியாபாரமும் அளவான பணவரவும் இருக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், சட்டம், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், வங்கியியல், ஜர்னலிசம், ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறுபவர்கள் முழு கவனத்துடன் படிப்பதால் மட்டுமே நல்ல தர தேர்ச்சி கிடைக்கும். மற்றவர்கள் ஓரளவு நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணச்செலவில் சிக்கனம் நல்லது. சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்கள் பேசக்கூடாது. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் முழு கவனம் தேவை. விளையாட்டு பயிற்சியில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். கல்வி சுற்றுலா புதிய அனுபவ பாடங்களை பெற்றுத்தரும்.
அரசியல்வாதிகள்: கூடுதல் சேவையால் மட்டுமே ஆதரவாளர்களிடம் இருக்கும் நற்பெயரை பாதுகாக்க இயலும். அரசு அதிகாரிகளிடம் காரியம் சாதிப்பதில் பின்தங்கும் நிலை ஏற்படும். தமக்கு நிகர் இல்லாதவர்களுடன் பழகுவதாலும் போட்டி போடுவதாலும சில இடர் வரலாம். கவனம் தேவை. இருக்கும் புகழை நிலைநிறுத்த அதிக சமூகப்பணி
புரிவது அவசியம். புத்திரரை அரசியல் பணிக்கு அளவுடன் பயன்படுத்துவது போதுமானதாகும். எதிரிகள் உங்களுக்கு சிரமம் தர நேரம் பார்த்து காத்திருப்பர். முன்யோசனையுடன் செயல்படுங்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான வியாபாரமும் அளவான பணவரவும் பெறுவர்.
விவாயிகள்: பயிர் வளர்ப்பில் கூடுதல் செலவு ஏற்படும். நில விவகாரங்களில் கவனம் செலுத்துவதை சிறிது காலம் தாமதம் செய்வது நல்லது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் பணவரவு முக்கிய தேவைகளுக்கு உதவும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மை வளரும்.
பரிகார பாடல்
கலையிலங்கும் மழுகட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங்கும் மணிமாடத்தர் வீழிமிழலையார்
தலையிலங்கும் பிறைதாழ்வடம் சூலம் தமருகம்
அலையிலங்கும் புனலேற்றவர்க்கும் அடியார்க்குமே!

No comments:

Post a Comment