Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்ரிஷபம்

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
(65/100) கவனம்
நேர்த்தியுடன் செயல்களை மேற்கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகுவும் இரண்டாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 10, 6ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வில் புதுவித அனுபவ பாடங்களை கற்றுத்தரும். இரு கிரகங்களுமே அனுகூலக் குறைவான இடத்தில் உள்ளனர். முன்யோசனையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குறைபாடு வராத நன்னிலை ஏற்படும். பேச்சில் ஆன்மிகமும் தத்துவமும் கலந்திருக்கும். சமூக நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி செயல்படுவதை பெரிதும் விரும்புவீர்கள்.
சொந்த பொருட்களை பிறர் பொறுப்பில் தருவதும், பிறர் பொருளை பாதுகாப்பதிலும் திருப்தியற்ற நிலை உள்ளது. வீடு, வாகனத்தில் இருக்கும் வசதிகளை சரிவர பயன்படுத்துவதே போதுமானதாகும். தாய்வழி உறவினர் உதவி மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். புத்திரரிடம் நீங்கள் அதிக பாசத்துடன் நடந்து அவர்களின் செயல்கள் வெற்றிபெற உதவுவீர்கள். எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பர். கவனம் தேவை. உடல்நலத்தில் ஆரோக்கியம் பேணுவது அவசியம். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்ற பணக்கடன் பெறுவீர்கள். தம்பதியர் தமக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். இதனால் வாழ்வில் எதிர்வரும் சிரமம் பெருமளவில் சரிசெய்யப்படும். மனநிறைவு தரும் வாழ்வுமுறை அமையும். நண்பர்கள் கருத்து ஒற்றுமையுடன் நடந்து உதவுவதும் உதவி பெறுவதுமான நன்னிலை காண்பர். நெருப்பு, மின்சாரம், நீர்நிலைகளில் தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். தந்தைவழி உறவினர் உங்கள் செயல்திறன் வளர ஆலோசனையும் இயன்ற உதவியும் தருவர்.
தொழில் சார்ந்த வகையில் பொறுப்புடன் பணிபுரிவது அவசியமாகும். வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம், தொழில்மாற்றம் போன்ற பலன்களும் இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு பெறுவதில் அனுகூலம் தரும் நற்பலன் உண்டு. உறவினர்களிடம் எந்த விஷயத்திற்காகவும் தகுதிக்கு மீறிய வாக்குறுதி தரக்கூடாது.
தொழிலதிபர்கள்: அழகு சாதனப் பொருட்கள், பெயின்ட், மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், பூச்சிகொல்லி மருந்து, விவசாய கருவி உற்பத்தி, உரவகைகள் உற்பத்தி செய்பவர்கள் உற்பத்தி பணச்செலவு அதிகரிக்கும் நிலைக்கு உட்படுவர். தொழிலில் கூடுதல் போட்டி ஏற்படுவதால் குறைந்த லாப விகிதத்தில் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வீர்கள். சிலர் உபதொழில் துவங்குவதில் ஆர்வம் கொள்வர். தொழிற்சாலை பணியாளர்களுடன் இருக்கும் நல்லுறவை பலப்படுத்துவது கூடுதல் நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒரு முகத்தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராத தன்மை திகழும். சிலர், நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட நேரிடும். பொறுப்புடன் பணிபுரிவது மட்டுமே சிரமம் அணுகாமல் தவிர்க்கும். சக பணியாளர்கள் நட்புறவு பாராட்டுவர்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, பீங்கான் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பொம்மை, கேமரா, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், பருத்தி ஆடை, வெள்ளி, வைர நகைகள், குளிர்பானம், பர்னிச்சர், பாத்திர வகைகள், பால் பொருட்கள், ரசாயன உரம் உட்பட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். ஆர்வமுடன் செயல்புரிவதால் மட்டுமே வியாபாரத்தை தக்க வைக்க முடியும். அளவான மூலதனம் போதும். அபிவிருத்தி பணியை எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றலாம்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி செயல்படுவது அவசியம்.கருமமே கண்ணாக செயல்படுங்கள். எதிர்வரும் காலத்தில் நன்மை கிடைக்கும். குடும்ப பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். புத்திரர்களின் படிப்பு, செயல்திறன் வளர்ப்பதில் முக்கிய பங்கு பெறுவீர்கள். நகைகளை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான வியாபாரமும், அளவான பணவரவும் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், வியாபார மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சினிமா, மாடலிங், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அழகுக்கலை, கேட்டரிங், அரசு நிர்வாகம், சட்டத்துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் மட்டுமே சிறந்த தரதேர்ச்சி கிடைக்கும். மற்ற துறையினர் சுமாராகப் படிப்பர். படிப்புக்கான பணச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொள்ள வேண்டாம். பெற்றோரின் நல் அன்பும் பாசமும் திருப்திகரமாக கிடைக்கும். சக மாணவர்கள் உதவும் மனப்பான்மையுடன் செயல்படுவர்.
அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டாலும் குறைந்த அளவிலேயே பலன் கிடைக்கும். இருக்கும் பதவி பொறுப்பை தக்க வைப்பதில் சீரான கவனம் வேண்டும். அதிகாரிகளிடமும் மாற்று இயக்கம் சார்ந்தவர்களிடமும் தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கொண்ட அன்பிலும் நம்பிக்கையிலும் குறை எதுவும் வராது. அதே சமயம் முயற்சிக்கும் காரியங்களில் தாமதம் இருக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமை நிறைந்த பணியாளரின் உதவியால் வியாபாரம் சிறப்படைய காண்பர். முக்கிய தேவைக்கு பணவசதியை கடனாக பெறுவீர்கள்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் பாதுகாப்பு நடைமுறையை கூடுதல் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். அளவான மகசூலும் பணவரவும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவே வருமானம் பெறலாம். நிலம் தொடர்பான விவகாரங்களில் பொறுமையான நடைமுறையை பின்பற்றவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
பரிகார பாடல்
அஞ்சனாதேவி பெற்ற அனுமனே போற்றி
இன்னலை தீர்க்கவந்த இறைவனே போற்றி
உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி
ஏற்றமே அருளும் செல்வமாருதி போற்றி

No comments:

Post a Comment