Sep 11, 2010

ராகு கேது பெயர்ச்சி பலன்கன்னி

ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2
(50/100) கஷ்டம்
வசீகரப் பேச்சால் பிறர் மனதில் இடம்பெறும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும், பத்தாம் இடத்தில் கேதுவும் கேந்திர ஸ்தானங்களில் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 6, 2ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை ராசிக்கு 12, 8ம் இடத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சி சில சிரமங்களையும், குறைந்த அளவில் பலனையும் வழங்கும் வகை உள்ளது. சமூகத்தின் மீதான உங்களின் பார்வை விழிப்புணர்வுடன் இருக்கும். இதனால் நன்மையை பெறுவதிலும் தீமையில் இருந்து விலகிச் செல்வதுமான புதிய யுக்தி பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் நல்வாழ்வு வளம்பெற இயன்ற உதவி புரிவீர்கள்.
வீடு, வாகனத்தில் இருக்கும் வசதியை முறையாக பயன்படுத்துவதே போதுமானதாகும். தாயின் அன்பையும் ஆசியையும் பெறுகின்ற விதத்தில் கனிவுடன் நடந்துகொள்வீர்கள். புத்திரர்கள் பெற்றோரின் எண்ணங்களுக்கேற்ப நடந்து படிப்பிலும், செயல்திறனிலும் வளர்ச்சி காண்பர். பூர்வ சொத்தில் தடைபட்ட வருமானம் எளிதாக கிடைக்கும். தம்பதியரிடம் நிலவிய கருத்து வேறுபாடு சரியாகும். ஒருவருக்கொருவர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கச் செய்வர். ஆபத்து தரும் என்று உங்களால் உணரப்படும் செயல்களை நிச்சயமாக தவிர்த்திடுங்கள். நண்பர்களால் புதிய அனுகூலம் பெறுவீர்கள். பணியின் காரணமாக வெளியூரில் குடிபெயரும் நிலை சிலருக்கு ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் உங்களின் பொறுப்பான செயல் மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தையும் தொழிலையும் சமஅளவில் முன்னேற்றுவீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், அச்சகம் நடத்துபவர், பிளாஸ்டிக், பர்னிச்சர், காகிதம், மின்சார உபகரண உற்பத்தி செய்பவர்கள், டெக்ஸ்டைல்ஸ், எண்ணெய் ஆலை நடத்துபவர் தொழிலில் வளர்ச்சித்தன்மை பெறுவதற்கு புதிய திட்டங்களை தகுந்த ஆலோசனையுடன் செயல்படுத்துவது அவசியம். அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. மற்ற தொழில் செய்பவர்களுக்கும் இதே நிலையே இருக்கும். ஒப்பந்தங்களை பெறுவதில் இடைத்தரகர்களுக்கு கூடுதல் கமிஷன் தரவேண்டியதிருக்கும். பணியாளர்களிடம் நல்லுறவு பேணுவது அவசியம். தொழிற்சாலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். கூட்டுத்தொழில் துவங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடம் கவனமாக இருங்கள். கூடுமானவரை அவர்களை ஒதுக்குவதே நல்லது. பெயர்ச்சியின் பிற்பகுதியில் அனுகூல பலன் கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தானியம், மளிகைப் பொருட்கள், ரசாயன பொருட்கள், ஸ்டேஷனரி, காகிதம், வீட்டு அலங்கார பொருட்கள், கட்டட, கட்டுமானப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், சமையலறை சாதனங்கள், மருந்து, புத்தக விற்பனையாளர்கள், வியாபாரத்தில் நல்ல நிலைமை பெற கூடுதல் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். அளவான வியாபாரமும் சுமாரான பணவரவும் கிடைக்கும். மற்ற வியாபாரிகள் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு பொருள் விற்க வேண்டி வரும். பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். அனுபவம் இல்லாத, புதிய உபதொழில்களை துவங்க முயற்சிக்க வேண்டாம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்கு உள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். கவனக்குறைவால் சிலருக்கு ஒழுங்கு நடவடிக்கை, பணி நீக்கம் போன்ற சிரமங்கள் ஏற்படும். நிதி நிறுவனம், வீட்டுக்கடன், வாகனக்கடன் தரும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், உறவினர், நண்பர்களுக்கு கடன்பெற சிபாரிசு செய்யக்கூடாது. பணவரவுக்கு மீறிய செலவுகளால் அல்லல்படுவீர்கள். சேமிப்பு பணம் செலவாவதும், சிறு அளவிலான பணக்கடன் பெறுவதுமான நிலைமை இருக்கும். சக பணியாளர்கள் தகுந்த உதவி புரிவர். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம்.
பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்வதில் சிறு இடையூறுகளை சந்திப்பர். சக பணியாளர்களின் நல் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சிரமம் விலகி நன்மை ஏற்படும். சலுகைகள் எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்கள் குடும்பச்செலவுக்கு திண்டாட நேரிடும். உறவினர் பெண்களின் சிபாரிசில் வீட்டு சாதனப் பொருட்கள் கடன் வகையில் பெறவேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுமானவரை ரொக்கத்திற்கு வியாபாரம் செய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பொருட்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்வது சிரமம் தவிர்க்க உதவும்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், சிவில் இன்ஜினியரிங், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஆசிரியர் பயிற்சி, கடல்சார் படிப்புகள், உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே நல்ல தரதேர்ச்சி பெறலாம். மற்றவர்களும் சுமாராகவே படிப்பர். உடல்நலத்திலும் விளையாட்டு பயிற்சியிலும் கூடுதல் கவனம் வேண்டும். பெற்றோர் சொல் கேட்டு நடப்பதால் படிப்பில் முன்னேற்றமும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையும் ஏற்படும். படிப்புக்கான பணச்செலவில் சிக்கன நடைமுறை நன்மை தரும்.
அரசியல்வாதிகள்: உங்கள் அரசியல்பணி சிறப்பாக இருந்தாலும் குறை சொல்வதற்கென்று சிலர் முயற்சிப்பர். உடல்நலத்தையும் மனவளத்தையும் சீராக பேணுவதால் நடைமுறை வாழ்வு சிறப்பு பெறும். ஆதரவாளர் நம்பிக்கை குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும். வழக்கு, விவகாரங்களில் ஆலோசனை சொல்வதை தவிர்த்து விடுங்கள். அரசியல் பணிக்கு உங்கள் புத்திரரின் உதவி உறுதுணையாக இருக்கும். தொழில் நடத்துபவர்கள் நம்பகத்தன்மையும் திறமையும் உள்ள பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே தொழில்நிலை சீராகும். செலவில் சிக்கனம் பின்பற்றவும்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் அதிக கவனம் வேண்டும். பூச்சி தாக்குதலுக்கு உரிய மருந்து தெளிப்பதால் நற்பலன் ஏற்படும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து பராமரிப்பதால் அதன் பலன் சீராக கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரத்தில் தீர்வு பெற தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மை பெருகும்.
பரிகார பாடல்
வெள்ளியான், கரியான், மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை எமக்கு
ஒள்ளியான், உயர்ந்தான், உலகமேழும் உண்டுமிழ்ந்தான்
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக்
கற்றை சந்தன முந்தி வந்தசை
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டியூரானே!

No comments:

Post a Comment