நாளை முதல், ஏப்ரல் மாதம் வரை உங்கள் செய்தொழில் சீராக நடந்தாலும், பெரிய அளவில் சேமிக்க முடியாது. மற்றபடி உங்களின் எதிர்பார்ப்பிற்கும் மேலாக வாய்ப்புகள் உங்களின் கை வந்து சேரும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய கூட்டு முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். வங்கிகளிடமிருந்து தேவையான கடன்கள் கிடைத்து, தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் பிரச்சினைகள் இல்லாமல் பழகுவார்கள். ஆன்மீகக் காரியங்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். அதே நேரம் சகோதர, சகோதரிகள் உறவில் குளறுபடிகள் நேரலாம்.
கேது பகவானின் அருளால் திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். நிம்மதியான சூழ்நிலை அமையும். பொழுது போக்கு அம்சங்களை மனம் அதிகம் விரும்பும். எந்தவொரு முயற்சியையும் புத்திசாலித்தனமாகவும், பொறுமையுடனும் கையாளுவீர்கள். பலருக்கு எதிர்பார்த்த திருமண வாய்ப்புகள் கைகூடும்.
ராகு பகவான், சிலருக்கு திடீர் வாகன யோகங்களை உண்டாக்குவார். சவால்களை தைரியமாகச் சமாளிப்பீர்கள். அதேநேரம் எவரிடமும் வீண் விரோதம் கொள்ள வேண்டாம். பிறரின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
இந்த ஆண்டு மே மாதம் முதல், வருட இறுதி வரை உள்ள காலகட்டத்தில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் உண்டாகும். பொதுநலக் காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்; அவர்களாலும் உதவிகளைப் பெறுவீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான் உங்களின் ஆன்மீக அறிவைத் தூண்டுவார். இதனால் 'பகவத் கீதை'யில் சொன்னபடி, அர்ப்பணிப்பு உணர்வோடு உங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். கடன் சுமைகள் முழுவதும் அடைந்து, கவலைகள் தீர்ந்துவிடும்.
ராகு பகவான் உங்களை குறிக்கோளை எட்டும் வகையில் உயர வைப்பார். உங்கள் எதிரிகள், உங்கள் கண்களில் படாமல் ஒதுங்கிச் செல்வார்கள். நெடுநாட்களாக தடைபட்டிருந்த சில காரியங்கள் ஈடேற நல்ல சந்தர்ப்பம் கூடி வரும்.
உத்யோகஸ்தர்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகள், உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். வருடத்தின் முற்பகுதியில் சக ஊழியர்களிடம் வீம்பாக எதையும் பேச வேண்டாம். மேலும் அனாவசியப் பயணங்களையும் செய்ய நேரிடும். ஆனால் வருடத்தின் பிற்பகுதியில் நீங்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த ஊதியமும் கிடைக்கும். இதனால் உங்கள் வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் நலமாகவே முடியும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அதே நேரம் ஆண்டின் முற்பகுதியில், அடுத்தவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கடன் கொடுக்க வேண்டாம். கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைந்தாலும் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். கையிருப்புப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடைகள் வைத்துள்ளோர், பால் வியாபாரம் செய்வோர் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு ஆண்டின் முற்பகுதியில் கட்சியில் மதிப்பு, மரியாதை குறைய நேரிடலாம். அதனால் கட்சி மேலிடத்தின் கண்களில் தேவையின்றி படாமல் அமைதியாகப் பணியாற்றுவீர்கள். ஆயின் ஆண்டின் பிற்பகுதியில் உங்களின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனால் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்கள் எதிரிகளின் பலம் குறையும்; புதிய தொண்டர்களும் கிடைப்பார்கள்.
கலைத்துறையினர், கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். அதேநேரம் ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கும் ஒப்பந்தங்கள் மனதிற்கு நிறைவு தருவதாக அமையாது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறப்பான வருமானத்தைப் பெறுவீர்கள்; ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நிலையில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். உற்றார், உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டில் முத்திரை பதிப்பீர்கள். பேச்சுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: சக்தி வழிபாடு உங்களை உயர்த்தும்.
No comments:
Post a Comment