நாளை முதல், ஏப்ரல் மாதம் வரை உங்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகும். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் அறிவுரை கூறுவீர்கள். அவர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள். போட்டி, பொறாமைகள் இருக்காது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும், கெüரவமும் உயரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு, வாகனங்களை வாங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான் உங்களை 'முக்கியஸ்தர்' என்கிற அளவுக்கு உயர்த்துவார். வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பகுதி நேரமாக மற்றொரு தொழிலையும் செய்யத் தொடங்குவார்கள். வாழ்க்கையில் அனுகூலமான பல திருப்பங்களைக் காண்பீர்கள்.
கேது பகவானால் புண்ணியத் தலங்களுக்கு செல்லும் யோகம் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். நுணுக்கமான பல கலைகளைக் கற்றுத் தேர்வீர்கள். இரவு நேர சிறு தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.
இந்த ஆண்டு மே மாதம் முதல், வருட இறுதி வரையிலான காலகட்டத்தில் தொழில் செய்ய வங்கிகளிடமிருந்தும் பழைய நண்பர்களிடமிருந்தும் பண உதவி கிடைக்கும். தாய் வழி உறவுகளிடமிருந்து குறிப்பாக மாமன் வழியிலிருந்து நன்மை அடைவீர்கள். சிலர் தொழிலை மற்ற ஊர்களிலும் விரிவுபடுத்துவார்கள். எதிர்பாராத பண வரவால் திக்குமுக்காடிப் போவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.
லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான், அனைத்துக் காரியங்களிலும் உபரி வருமானத்தைக் கூட்டிக் கொடுப்பார். குல தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்களைச் செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு உண்டாகும்.
இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான், உங்களை முன் யோசனையோடு செயல்பட வைப்பார். தனித்துச் செய்யும் காரியங்களில் நன்மை உண்டாகும். அதேசமயம் பெற்றோர் வழியில் சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உங்கள் பெயரில் பிறருக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். உங்கள் மேலதிகாரிகளின் மனநிலை அறிந்து சமயோஜிதமாக நடந்து கொள்வீர்கள். சிறிய அளவு முயற்சிகளிலேயே நிறைவான வெற்றிகளை அடைவீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால், சில குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். அதனால் அவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
வியாபாரிகள், துணிந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் இரட்டிப்பாகும். விநியோக விவகாரம் உட்பட அனைத்து விஷயங்களும் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். கொடுத்திருந்த கடன்களும் திரும்பக் கை வந்து சேரும். வியாபாரத்தை நல்ல முறையில் விரிவுபடுத்துவீர்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இதனால் சந்தை வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அதோடு செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு லாபத்தை அள்ளுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மைகள் அடையலாம். வயல் வரப்பு பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.
அரசியல்வாதிகளுக்கு, தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். இருப்பினும் கட்சியில் யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். மக்களுக்கான நியாயமான போராட்டங்களில் மட்டுமே ஈடுபடவும். மற்றபடி புதிய பொறுப்புகளைக் கவனத்துடன் கையாளுவீர்கள்; கட்சிப் பணிகளை புதிய யுக்தியுடன் செய்வீர்கள்.
கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும். வெளிநாட்டுப் பயணங்களை ரசிகர்களின் ஆதரவுடன் மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறந்து, இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
மாணவமணிகள், கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து இந்த ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அனைத்து இடையூறுகளையும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவினால் தாண்டி வந்துவிடுவீர்கள்.
பரிகாரம் : ராமர், சீதா, லட்சுமணர், அனுமனை வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment