2011ஆம் ஆண்டு, ஆங்கிலப் புத்தாண்டில், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உங்களின் பணிகளை அதிகார தோரணையுடன் செய்து வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள், உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைத் தேடிப் பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கிடைக்கும். உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து புதிய பலம் பெறுவீர்கள்.
தைரிய ஸ்தான கேது பகவானின் அருளால், சில சந்தர்ப்பங்களில் அசட்டுத் துணிச்சலுடன் நீங்கள் செய்யும் காரியங்களும் சரியாக முடிந்துவிடும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தத்துப்பிள்ளையாக பிறர் வீட்டிற்கு வந்தவர்களுக்குப் பிறந்த வீட்டிலிருந்து திடீரென்று சொத்துக்கள் கிடைக்கும்.
குரு பகவானின் அருளால் வெளியூர் பயணம் செய்து நன்மைகளைப் பெறுவீர்கள். அதேநேரம் இந்தக் காலகட்டத்தில் கர்வத்தை விட்டொழித்து நேர்மையாக நடந்து கொள்ளவும். உற்றார், உறவினர்களிடம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். குழந்தைகளை அனாவசிய கேளிக்கைப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுத்த வேண்டாம். அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளவும், பெரியோரிடம் பாராட்டுகள் பெறவும் வழிகளை ஏற்படுத்தவும்.
இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் தனித்திறமை வெளிப்படும். சுதந்திரமாகச் செயல்பட்டாலும் அனைவரின் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். சிறிது கடினமாகப் பேசினாலும் சூழ்நிலையை அறிந்து பேசுவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். சிலருக்குப் பழைய வீட்டை வாங்கி 'கிரகப் பிரவேசம்' செய்யும் பாக்கியமும் உண்டாகும். சரியான முடிவுகளை எடுத்தாலும் அதைப் பற்றி அனுபவஸ்தர்களிடம் கலந்து ஆலோசிப்பீர்கள். ஒரு காலத்தில் உங்களுக்கு உதவியர்களுக்கு நீங்கள் உதவும் காலகட்டம் இது. அதே சமயம் சிலர், சில நேரங்களில் வறட்டுப் பிடிவாதம் கொள்வீர்கள். மேலும் மறைமுக எதிர்ப்புகளையும், போட்டிகளையும் சந்திக்க நேரிடலாம்.
உத்யோகஸ்தர்களைப் பொறுத்தவரை அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவீர்கள். அலுவலக ரீதியாகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உங்களைத் தேடி வரும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. நீங்கள் வாழும் பகுதியிலேயே மனதிற்கு இனிய பணி மாற்றங்கள் கிடைக்கும்.
வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து கொடுக்கல், வாங்கலில் லாபம் அடைவீர்கள். எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வாகனங்களை வாங்குவீர்கள். சரளமான பண வசதி இருப்பதால் புதிய பொருட்களை வாங்கி விற்க முயற்சி செய்வீர்கள். கடையையும் அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
விவசாயிகளுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும். மகசூலில் எதிர்பார்த்த விளைச்சலைக் காண்பீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். அதேநேரம் பூச்சி, புழுக்களால் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும்.
அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும். அதனால் வாழ்க்கைத் தரம் உயரும். அதேசமயம் கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையும் என்பதால் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமாகவும், பொறுமையுடனும் நடந்துகொண்டு வெற்றிப் பாதையை எட்டுவீர்கள். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் வர வேண்டிய பணம் வந்து சேரும். அதேசமயம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்கள் உங்கள் மீது சற்று அக்கறை இல்லாமல் இருப்பார்கள். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
பெண்மணிகளுக்கு நினைத்தவை நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அன்புடன் நடத்துவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து, மேலும் புத்துணர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குல தெய்வ ப்ரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெறக் கடுமையாக உழைப்பீர்கள். புதிய மொழிகளைக் கற்கவும் ஆர்வம் உண்டாகும். உற்சாகமுடன் இருக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதே நேரம் விதண்டாவாதம் செய்யும் நண்பர்களுடன் சேர வேண்டாம். போராட்டங்களிலிருந்தும் ஒதுங்கியிருங்கள்.
பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்யவும். நந்தி பகவானுக்கு அருகம் புல் மாலை அணிவிக்கவும்.
No comments:
Post a Comment