நாளை முதல், ஏப்ரல் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனத்தை முன்னெப்போதையும் விடச் சரியாக உணர்ந்து கொள்வீர்கள். மற்றவர்களின் உண்மையான மன நிலைகளை உங்களின் உள்ளுணர்வால் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள். அரசு வழியில் சிறப்பான சலுகைகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள், உங்கள் கட்டளைகளை சிரமேற் கொண்டு நிறைவேற்றுவார்கள். உங்களின் போட்டியாளர்களுடன் கலந்தாலோசித்து பொருட்களின் விலையை நிர்ணயிப்பீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
இந்தக் காலகட்டத்தில் கேது பகவான், உங்களின் அரசியல் தொடர்பை வலுப்படுத்துவார். இதற்கு குடும்பத்தினரின் ஆதரவையும் பெறுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களை வெறுப்பவர்களையும் விரும்ப வைப்பீர்கள். பழைய சொத்துக்களின் மூலம் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.
ராகு பகவான், அவசியமான பணிகளைச் செய்யும் காலத்தில் உங்களுக்குள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவார். அதைப் பொருட்படுத்த வேண்டாம். ஆனால் உங்களின் கௌரவத்திற்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. மற்றபடி உங்களின் நண்பர்கள், தங்களின் தகுதிக்கு மீறி உங்களுக்கு உதவி செய்வார்கள்.
இந்த ஆண்டு மே மாதம் முதல், டிசம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தாய் வழியில் நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். நன்கு சிந்தித்த பிறகே முக்கியமான விஷயங்களைச் செயல்படுத்துவீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நன்மை தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அயல்நாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயங்களைப் பெறலாம்.
கேது பகவான், உங்களின் மனதில் சிறிது குழப்பத்தை உண்டாக்குவார். அதனால் சோர்வைப் பொருட்படுத்தாமல் சுயக் கட்டுப்பாட்டுடன் உழைக்க வேண்டியிருக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகளுக்கும் சிலர் ஆளாவீர்கள். உங்கள் மனதில் ஆர்வம் இருந்தாலும், சில நேரம் ஏதோ கடமைக்காகப் பணி செய்வதைப் போன்ற உணர்வு மேலோங்கும். இதை 'தியானம்' பழகி, வெற்றி கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் மீறி, இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான், அனைத்துத் தடைகளையும் தகர்த்துக் காரியங்களில் வெற்றி பெறும் அளவிற்கு உங்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார்; உயர்ந்த பதவிகளை அளிப்பார். உங்களைத் திறமைசாலி என்று அனைவரும் பாராட்டுவார்கள்.
உத்யோகஸ்தர்கள், இந்த ஆண்டு தங்களின் தகுதிகளை வளர்த்துக் கொள்வீர்கள். வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கு எந்தத் தடையும் ஏற்படாது. அதேநேரம் ஆண்டின் பிற்பகுதியில் சக ஊழியர்களின் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே அலுவலகத்தில் எவரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
வியாபாரிகளுக்கு ஆண்டின் பிற்பகுதியில் தொழிலில் சில சிரமங்கள் ஏற்படும். மேலும் கூட்டாளிகளுடன் சிறு மனக் கசப்புகளும் உண்டாகலாம். அதனால் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை எவரிடமும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி வியாபாரத்தைப் பெருக்குவதற்குப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகி பொருளாதாரம் மேம்படும்.
விவசாயிகள், விளைச்சல் நிலங்களில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயக் கூலிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். அதேநேரம் சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல்கள் ஏற்படும். இருப்பினும் முடிவு சாதகமாகவே இருக்கும். நன்கு யோசித்து புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். நீங்கள் நன்றாகப் பாடுபட்டு உழைக்கும் ஆண்டாக இந்தப் புது வருடம் அமையும்.
அரசியல்வாதிகள் அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெற்றாலும், கட்சி மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். மற்றபடி சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
கலைத்துறையினருக்கு சிறு தடைகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். இந்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். சக கலைஞர்கள்கூட உங்களுக்கு உதவமாட்டார்கள். அதோடு திட்டமிட்ட வெளியூர் பயணங்கள் திடீரென்று ரத்தாகிவிடும். ஆயினும் பொருளாதாரம் சீராகவே இருக்கும்.
பெண்மணிகள், மனோ தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்களின் வலிமையைக் குறைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து சுமுக நிலையை உண்டாக்கவும். வீண் வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசியும், கணவரின் ஆதரவும் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குக் கிடைக்கும். பிறகேன் கவலை?
மாணவமணிகளைப் பொறுத்தவரை படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தவும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகா மற்றும் ப்ரணாயாமம் போன்றவைகளைச் செய்து மன வளம் மற்றும் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: சுயம்பு லிங்கங்களை தரிசிப்பதும், தியானிப்பதும் எல்லா விதமான கெடு பலன்களையும் தவிடு பொடியாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment